இந்தியா

மோடி அரசின் ஓராண்டு கொண்டாட்டத்தில் துவங்கியது சர்ச்சை

ஆர்.ஷபிமுன்னா

மத்தியில் ஆட்சி அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒரு வருடம் பூர்த்தி செய்வதை ஒட்டி நாடு முழுவதும் ஒரு வாரக் கொண்டாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கூட்டம் வரும் மே 25 ஆம் தேதி, பாரதிய ஜனதாவின் சிந்தனையாளரான தீன்தயாள் உபாத்யா பிறந்த மத்துராவில் பிரதமர் நரேந்தர மோடி கலந்துகொள்கிறார்.

உத்தரப் பிரதேசத்தின் தெய்வீக நகரமான மத்துராவில் நக்லா சந்திரபான் எனும் கிராமத்தில் பிறந்தவர் தீன்தயாள் உபாத்யா. பாஜகவின் சிந்தனையாளரான இவர், அக்கட்சியின் உ.பி. மாநில முதல் பொதுச்செயலாளராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டவர். இவர் பாஜகவிற்கு செய்த பணிகளை நினைவுகூரும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாண்டு கூட்டம் தீன்தயாள் பிறந்த கிராமத்தில் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து 'தி இந்து'விடம் உ.பி. மாநில பாஜகவின் தலைவர் எல்.கே.வாஜ்பாய் கூறும்போது, "இந்தக் கூட்டத்தில் உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள 10 மாவட்டங்களின் பாஜகவினர் கலந்து கொள்வார்கள். இங்கு கலந்து கொள்ளும் இரண்டாவது பிரதமராக மோடி உள்ளார். இவருக்கு முன் தேஜகூ ஆட்சியில் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாயும் நக்லா சந்திரபானின் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். பிரம்மாண்டமான முறையில் நடத்தவிருக்கும் இது, 2017-ல் வரவிருக்கும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலின் பிரச்சாரத் துவக்கக் கூட்டமாகவும் அமையும்" எனக் கூறுகின்றார்.

அத்வானிக்கு அழைப்பு இல்லை

தீன்தயாள் உபாத்யாவின் 'ஜென்மஸ்தலி ஸ்மார்க் சமிதி' எனும் அமைப்பின் சார்பில் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்திற்கு பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால், முன்னாள் பிரதமரான வாஜ்பாய் உட்பட பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். இதனால், ஓராண்டு கூட்டத்திலேயே சர்ச்சைகள் துவங்கி விட்டதாகக் கருதப்படுகிறது.

இதற்கு தீன் தயாள் சமிதியின் நிர்வாகிகள், அத்வானி எங்கள் அமைப்பின் என்றைக்குமே இருந்ததில்லை என்பதால் அழைக்கப்படவில்லை எனக் காரணம் கூறி உள்ளனர். இது குறித்து உ.பி. மாநில செய்தி தொடர்பாளர் விஜய் பகதூர் பாத்தக், இது கட்சி சார்பில் நடத்தப்படவிருக்கும் பெரும் கூட்டம் எனவும், இதில் சமிதிக்கு பெரிய பங்கு எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தின் ஏற்பாடுகளில் பாலிவுட் நடிகை ஹேமாமாலினியும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். மத்துராவின் பாஜக எம்பியான ஹேமாமாலினி, மோடி தனது உரையில் தம் தொகுதிக்காக புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனக் கூறியுள்ளார்.

கடந்த வருடம் மே 26-ல் தேஜமு ஆட்சியின் பிரதமராக மோடி பதவி ஏற்றார். இதன் ஒரு வருடம் நிறைவடைந்ததை 'ஜன் கல்யாண் பர்வ்' எனும் பெயரில் வரும் மே 25 முதல் 31 வரையில் கொண்டாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும் 250 வெற்றிவிழாக் கூட்டங்கள் மற்றும் பத்திரிகையாளர் கூட்டங்கள் 500-ம் நடைபெற உள்ளன. இவற்றை நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களின் பாஜக எம்பிக்கள் தம் தொகுதிகளில் கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், பாஜகவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT