இந்தியா

ஓடும் பஸ்ஸில் மானபங்கப்படுத்தியதில் சிறுமி பலி: காங்கிரஸ், ஆம் ஆத்மி முற்றுகைப் போராட்டம் - உடலை தகனம் செய்ய குடும்பத்தினர் மறுப்பு

பிடிஐ

ஓடும் பஸ்ஸில் மானபங்கப்படுத்தி தள்ளியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் சார்பில் டெல்லி, பஞ்சாபில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கடந்த 29-ம் தேதி பஞ்சாப் மாநிலம் மோகாவில் இருந்து 38 வயதான பெண், அவரது 14 வயது மகள், 10 வயது மகன் ஆகியோர் பாகபுரானா என்ற இடத்துக்கு பஸ்ஸில் புறப்பட்டனர். நடத்துநர், உதவியாளர், மற்றொரு நபர் ஆகியோர் சேர்ந்து தாயையும் சிறுமியையும் மானபங்கப்படுத்தினர்.அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரையும் ஓடும் பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்டனர். இதில் சிறுமி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தாய் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்துக்கு காரணமான பஸ், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி போர்க்கொடி

இச் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் நேற்று பாதலின் மருமகளும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் பாதல் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பஞ்சாப் தலைநகர் சண்டிகர், மோகா ஆகிய நகரங்களில் காங்கிரஸாரும் ஆம் ஆத்மி கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமியின் தந்தை சுக்தேவ் சிங் கூறியதாவது: பஸ்ஸின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதுவரை எனது மகளின் உடலை தகனம் செய்யமாட்டோம் என்று தெரிவித்தார்.

11 பேர் கும்பல் பலாத்காரம்

இதனிடையே மோகா மாவட்டம் வாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணை 11 பேர் சேர்ந்து கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜஸ்வந்த் சிங் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT