இந்தியா

பேளூர் ராமகிருஷ்ண மடம் மோடிக்கு அழைப்பு

செய்திப்பிரிவு

ராமகிருஷ்ண மடத்தின் தற்போதைய தலைவர் ஆத்மாஸ்தானந்த் மகராஜ், மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியப் பிரதமராக பேளூர் மடத்துக்கு உங்களின் வருகையை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடியை கடிதத்தில் ‘நரேந்தர் பாய்’ என்று அழைத்துள்ள மகாராஜ், “தேர்தலில் நீங்கள் தனிப் பெரும்பான்மை பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். ஜாதி, மதம், இனப் பாகுபாடின்றி இந்திய மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பை ஸ்ரீராமகிருஷ்ணர் உங்களுக்கு வழங்கியுள்ளார். சிக்க லான நேரத்தில் சரியான புரிதலை வழங்கும்படி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மோடி தனது மாணவப் பருவத்தில் பேளூர் மடத்துக்கு வந்து அங்கு துறவியாக சேர விரும்பியதையும், ஆனால் அதற்குரிய வயதை பெறாத மோடியை படிப்பில் கவனம் செலுத்துமாறு மடத்தின் அப்போதையை தலைவர் அறிவுரை கூறி திரும்பி அனுப்பியதையும் ஆத்மாஸ்தானந்த் மகராஜ் தனது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

இதையடுத்து மோடி அல்மோராவில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றுள்ளார் அங்கும் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதை மகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

“இதையடுத்து இமயமலைக்குச் சென்ற மோடி 2 ஆண்டுக்குப் பிறகு தனது சொந்த கிராமம் திரும்பினார். பின்னர் ராஜ்கோட்டில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு அடிக்கடி சென்றுவரத் தொடங்கினார். அங்குதான், ராமகிருஷ்ண மடத்தின் தற்போதைய தலைவர் ஆத்மாஸ்தானந்த மகராஜை மோடி சந்தித்துள்ளார். அவரிடமிருந்து ஆன்மிக போதனைகளை மோடி பெற்றுள்ளார். துறவி ஆகும் தனது விருப்பத்தை மோடி மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார். ஆனால் மகராஜ் இதனை ஏற்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு பேளூர் மடத்துக்கு வந்த மோடி, “இங்கிருந்து சென்றுவிடு என்று நீங்கள் அன்று கூறினீர்கள். அதனால்தான் நான் இன்று குஜராத் முதல்வராக இருக்க முடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பேளூர் மடத்தின் துறவிகள் கூறினர்.

பேளூர் மடத்தின் துறவி சுபிரானந்த மகராஜ் கூறுகையில், “பேளூர் மடத்திலிருந்து ஆன்மிக சக்தி உருவாகும் என்று அது இந்த நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றும் சுவாமி விவேகானந்தர் முன்பே கணித்துள்ளார்.

விவேகானந்தரின் கோட்பாடுகள், போதனைகளால் கவரப்பட்டவர் மோடி. விவேகானந்தரின் கணிப்பு தற்போது வடிவம் பெறத் தொடங்கியுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT