நிலநடுக்கத்தால் நேபாளத்துக்கு ஏற்பட்டுள்ள வேதனையை பகிர்ந்து கொள்வோம். நம் பிரியத்துக்குரிய அந்த சகோதர நாடு துயரத்திலிருந்து வேகமாக மீண்டெழும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கவுதம புத்தரின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் புத்த பூர்ணிமா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, நோபாளத்தில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
புத்தரின் பிறப்பிடமும், நமது பிரியத்துக்குரிய சகோதர நாடுமான நேபாளம் பெரும் இடர்பாட்டில் சிக்கியுள்ளது. இந்த கடினமான சூழலைத் தாங்க வேண்டிய நிலையில் நோபாள மக்கள் உள்ளனர். இந்தப்பயணம் எவ்வளவு தூரம் என்பதையும், சிரமத்துக்குரியது என்பதையும் கற்பனை செய்வது கடினம். நேபாள மக்களின் வலியை நாம் பகிர்ந்து கொள்வோம். அவர்களுக்கு புதிய சக்தியைத் தருவதற்காக புத்தரை வேண்டுவோம்.
உலகம் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது, புத்தரின் கோட்பாடுகள் நல்ல வழியைக் காட்டும். வன்முறை உச்சத்தில் இருக்கிறது. உலகின் பெரும்பகுதி குருதியில் நனைந்திருக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் மற்றவரின் ரத்தத்துக்காக அலைகிறார்கள். ரத்தம் சொட்டும் இத்தருணத்தில், கருணைக்கான செய்தி எங்கிருந்த வரும். புத்தரும், அவரது கொள்கைகளுமே நமக்கான ஒரே சேரிடம்.
அதிகாரமும் செல்வமும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கப் போதுமானவை எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அன்பும் இரக்கமுமே மனிதனுக்கு நலன் விளைவிக்கும் மிகப்பெரிய சக்திகள் என்பதை உணர்ந்திருந்தார்.
போர் மற்றும் வன்முறை ஆகிய உலகின் பெரும் பிரச்சினைகளிலிருந்து விடுபட புத்தரின் காலத்தால் அழிக்கமுடியாத போதனைகளான அன்பும் கருணையும் சிறந்த தீர்வாக அமையும். போரிலிருந்து விடுபட புத்தரின் பாதையில் நடங்கள். நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமூகத்தில் புரட்சி ஏற்பட விரும்பியவர் புத்தர். அதைப்பற்ற தற்போதும் விவாதிக்கிறோம். அவரின் போதனைகள் தற்காலத்துக்கும் ஏற்றவை.
புத்தருடன் தொடர்புடைய பொருட்கள் கிடைத்த குஜராத்தின் வத் நகர் பகுதியில் புத்த விஹாரம் கட்டுவதற்கான திட்டம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா, உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, சர்வதேச புத்த கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லாமா லோப்ஸாங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.