முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 24-வது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர பூமியில், அவரது மனைவியும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவின் மகன் ராகுல், மகள் பிரியங்கா, மருமகன் ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்களான பி.சி.சாக்கோ, ஆஸ்கார் பெர்ணாண்டஸ், குலாம் நபி ஆசாத், அஜய் மக்கான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சக்தி ஸ்தல் பகுதிக்குச் சென்ற அவர்கள், அங்குள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பிரதமர் மோடி ட்விட்டரில், “ராஜீவ் நினைவு நாளில் அவருக்கு எனது மரியாதையை செலுத்து கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டு சென்னை அருகே உள்ள பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட் டிருந்தபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண் தற் கொலைப்படை தீவிரவாதியால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டார். கடந்த 1984 அக்டோபர் 31-ம் தேதி முதல் 1989-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி வரை ராஜீவ் காந்தி பிரதமராக பதவி வகித்துள்ளார்.
பிரணாப் பங்கேற்கவில்லை
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி ஆகிய இருவரும் இதற்கு முன்பு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவரது நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு இந்த இரு தலைவர்களுமே அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
மத்தியில் புதிதாக பொறுப் பேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசு, இதுபோன்ற நிகழ்ச்சிகளை அரசு சார்பில் நடத்துவதில்லை என முடிவு செய்ததாலேயே இருவரும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் கூறும்போது, “இதுபோன்ற நிகழ்ச்சிகளை குடும்பத்தினரோ அல்லது கட்சியின் சார்பிலோ நடத்த வேண்டும் என்று புதிய அரசு முடிவு எடுத்தது. இதையடுத்து ராஜீவ் நினைவுதின நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சிதான் ஏற்பாடு செய்திருந்தது” என்றனர்.