ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று வெளியான தீர்ப்பு தொடர்பாக, வழக்கின் முக்கிய மனுதாரரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவருமான சுப்பிரமணியன் சுவாமி ‘தி இந்து’வுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
இத்தீர்ப்பு மிக மோசமானது என விமர்சித்துள்ள அவர், இதற்குப் பின் அதிமுகவுடன் கூட்டணி என்று பாஜக முடிவு செய்தால் அதை கட்சியினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது பேட்டி வருமாறு:
ஜெயலலிதா மீது வழக்கு தொடுத்த நீங்கள் அதன் தீர்ப்பு மீது கூற விரும்புவது என்ன?
இது ஒரு மோசமான தீர்ப்பு. இதுபோன்ற தீர்ப்பு தர ஒரு ஆதாரமும் இல்லை என்பது எனது கருத்து. ஏனெனில் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி குன்ஹா, அனைத்தையும் அலசிப் பார்த்து தீர்ப்பளித்திருந்தார். ஒரு ரூபாய் சம்பளத்தில் முதல்வர் பதவியை வகித்ததாக ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் அவர் இந்தப் பதவியை வகிப்பதற்கு முன் தனக்கு பண கஷ்டம் இருப்பதாக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பல கடிதங்கள் எழுதியிருந்தார். ஜெயலலிதாவின் சொத்து சினிமாவின் உழைப்பு என்றும் அவர் மைசூர் ராணி குடும்பத்தில் வந்தவர் எனவெல்லாம் வைத்த வாதங்களுக்கு ஆதாரங்கள் இல்லை. எனவே அவருடைய இந்த சொத்து அனைத்தும் ஊழல் செய்து சம்பாதித்தது என தெளிவாகத் தெரிகிறது. வெளிநாட்டில் இருந்து அவருக்கு வந்த பணத்துக்கும் அவரால் இதுவரை தெளிவான பதில் அளிக்க முடியவில்லை.
நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் ஜெயலலிதா தான் வருமான வரி கட்டியதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்ததாகவும், அதை செஷன்ஸ் நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளாரே?
இதற்கு நான் ஏற்கெனவே எழுத்து மூலமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் பதில் அளித்துள்ளேன். வருமான வரியை பொறுத்தவரை அவர் வரி மற்றும் அதற்கான அபராதத்தை கட்டிய பின் அவருக்கு மன்னிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வரி மற்றும் அபராதத்தை கட்டியதால் அவர் அந்தக் குற்றத்தை ஒப்புக் கொள்கிறார் என்றே அர்த்தம். இதற்காகத்தான் அவரது அபராதத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. தவிர இதற்காக வருமான வரி சட்டத்தில் எந்த இடத்திலும் இந்த இரண்டையும் கட்டியமைக்காக ஜெயலலிதா மீது வழக்கு நடத்தாமல் இருப்பதாகக் கூறப்படவில்லை.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு கர்நாடக அரசுக்கு மட்டும் தான் வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனரே?
குஜராத்தில் நடந்த மதக்கலவர வழக்குகளின் தீர்ப்புக்கு பின், அதை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனில், பாதிக்கப்பட்டவருக்கு அந்த உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன் அடிப்படையில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிடில், மனுதாரரான எனக்கு அந்த உரிமை உள்ளது. எனவே கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தால் அதற்கு நான் உதவியாக இருப்பேன். அவ்வாறு செய்யவில்லை எனில் நான் கண்டிப்பாக மேல்முறையீடு செய்வேன்.
இந்த தீர்ப்புக்குப் பிறகு தமிழகத்தில் புதிய மாற்றங்கள் ஏதும் வரும் என எதிர்பார்க்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. ஏனெனில் இதுபோன்ற சூழல் தமிழர்களுக்கு புதிதல்ல. இதற்குமுன், ஜெயலலிதா டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்ட பின் மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டார். அதேபோல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ராஜ்நாராயண் போட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டபோது, உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் வெற்றி பெற்றார். ஆனால் அதன் பிறகு 1977-ல் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். எனவே மக்கள் விரும்பினால் ஊழல் செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்களை தோல்வி அடையச் செய்வார்கள்.
இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே உங்களுக்குத் தெரிந்தது எப்படி?
இத்துடன் சேர்த்து அவரை விடுதலை செய்ய இருப்பதாகவும் கூட கேள்விப்பட்டேன். ஆனால் அதை நான் நம்பவில்லை. 12-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழக்கு இருப்பதால் தான் 11-ம் தேதி தீர்ப்பு என்பதை நம்பினேன். அந்த நீதிமன்றத்தில் பதிவாளருக்கு இணையான பொறுப்பில் இருக்கும் எனது நண்பர், நீதிபதியின் உடல் அசைவுகளை பார்த்தால் அவர் ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுதலை செய்து விடுவார் போல் தெரிவதாகக் கணித்து கூறியதை நான் நம்பவில்லை.
இந்த அளவுக்கு நீதிமன்றத்தில் உங்களுக்கு ‘சோர்ஸ்’ உள்ளது எனில், இந்த வழக்கில் உங்களால் ஜெயிக்க முடியாதது ஏன்?
நீங்கள் சொல்வதை பார்த்தால் நான் ஊழல் செய்து வழக்கில் ஜெயித்திருக்க வேண்டும் எனக் கூறுவதை போல் உள்ளது. நான் அப்படி செய்ய மாட்டேன். எந்த வழக்கின் விசாரணையிலும் நான் தலையிட மாட்டேன். அது சட்டப்படி தவறு.
இந்த தீர்ப்பில் மத்திய அரசுக்கு ஒரு பங்கு இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேச்சு எழுந்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?
நானும் இதை கேள்விப்பட்டேன். ஆனால் இதற்கு ஆதாரம் இல்லாமல் நான் எப்படி சொல்ல முடியும்? மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்து, சாப்பிட்டு வந்தார். இதையெல்லாம் ஒரு ஆதாரமாக்கிக் கூற முடியாது.
இந்த தீர்ப்பை பாஜக வரவேற் றுள்ளது. அதிமுக எம்.பி.க்களுக்கு மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் நாடாளுமன்ற வளாகத்தில் வாழ்த்து தெரிவித்தாரே?
வழக்கில் வென்றதற்காக வாழ்த்து கூறியிருப்பார். அதை அரசியல் உள்நோக்கத்துடன் பார்க்க முடியாது (சிரிக்கிறார்).
ஊழலுக்கு எதிராக தொடர்ந்து வழக்கு தொடுத்து வரும் நீங்கள், இந்த வழக்கின் தீர்ப்புக்கு பிறகும் அந்த முயற்சியை தொடர்வீர்களா?
இதுபோன்ற தோல்வி எனக்கு புதிதல்ல. 1977-ல் இந்திரா காந்தி மீதும் நான் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். அதில் அவர் தோற்றபின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றார். இதுபோன்ற திரைப்பட பாணி மனப்பான்மை மிகவும் தவறானது. நாம் ஊழல் எனும் களத்தில் ஒரு யுத்தம் செய்கிறோம். அதில் இன்று தோற்றால் நாளை வெல்வோம். வெற்றி, தோல்விகள் சகஜமானது. இதுபோன்ற விஷயங்களில் நான் நம்பிக்கை இழக்க மாட்டேன். இதில் தோல்வி என்பது எனக்கு பெரிய விஷயம் அல்ல.
இந்த தீர்ப்புக்கு பின் தமிழக அரசியல் கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என கருதுகிறீகளா?
இந்த தீர்ப்புக்குப் பின், அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேரும் என பேசப்படுகிறது. ஆனால் அதற்கான முடிவு தனிப்பட்ட யாரிடமும் இல்லை. இதை அனைவரும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பான பேச்சு கட்சியில் எழுந்தால், நான் அந்த கூட்டத்தில் எனது கருத்தை சொல்வேன். எனினும், கட்சி ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை அனைவரும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.