இந்தியா

நடுரோட்டில் கிடந்த மனிதத் தலை: அலறிய ஹைதராபாத் மக்கள்

என்.மகேஷ் குமார்

ஹைதராபாத் நகரில் நடு ரோட்டில் கிடந்த மனித தலையைப் பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதனால், நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலை காலிகூடா சிவாஜி மேம்பாலத்தில் நடு ரோட்டில் மனித தலை துண்டாக வெட்டுப்பட்டு கிடந்தது. அந்த வழியே சென்ற ஹைதராபாத் நகரவாசிகள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர். அனைத்து வாகனங்களும் சாலையின் இருபுறமும் நின்று விட்டன. யாரையோ கொலை செய்து தலையை நடுரோட்டில் போட்டு விட்டதாக தகவல் பரவியது.

அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் இதுதொடர்பாக அப்ஜல்கன்ஞ் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினரும் அங்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ரயில்வே போலீஸார் அந்த ‘தலை’ தொடர்பான உண்மைத் தகவலை காவல்துறையினரிடம் கூறி, அதனைப் பெற்றுச் சென்றனர்.

உப்பகூடா ரயில் நிலையம் அருகே நேற்று காலை அடையாளம் தெரியாத ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தலை வேறு, உடல் வேறாக இருந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், அவற்றை ஒரு கோணிப்பையில் போட்டு கட்டி, ஒரு ரிக்‌ஷா வண்டியில் வைத்து பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரிக்‌ஷாவில் செல்லும்போது, கோணிப்பை சரியாக கட்டப்படாத தால், அதிலிருந்த தலை மட்டும் பாலத்தில் நடு ரோட்டில் விழுந்திருக்கிறது. உஸ்மா னியா மருத்துவமனையில் கோணிப் பையை இறக்கிப் பார்த்த போது அதில் தலை இல்லாததைக் கண்ட ரயில்வே போலீஸார் அந்த தலையைத் தேடி ரிக்‌ஷாகாரர் வந்த வழியே திரும்ப தேடிச் சென்றனர். அப்போதுதான், ‘தலை’யைக் கண்டு மக்கள் கூட்டமாக நின்றதைப் பார்த்து, காவல்துறையிடம் சொல்லி அதனை மீட்டுச் சென்றனர்.

SCROLL FOR NEXT