''தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா மீது தொடுத்த சொத்துக்குவிப்பு வழக்கு இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கியமான வழக்கு.
19 ஆண்டுகளாய் நீடித்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்புக்காக நாட்டிலுள்ள மூத்த வழக்கறிஞர்கள் பலர் வாதாடினர். இறுதியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இருவர் ஆஜரானார்கள்.
கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மூத்த வழக்கறிஞருமான ஆர். பசன்ட் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்காக ஆஜரானார். இவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸின் மாணவர் ஆவார். கோழிக்கோடு அரசு சட்டக்கல்லூரியில் படித்த ஆர்.பசன்ட் 15 ஆண்டுகள் கேரள உயர் நீதிமன்றத்தில் முக்கிய வழக்குகளில் வாதாடியுள்ளார். 1988-ல் திருவனந்தபுரம் முதன்மை அமர்வு நீதிபதியாக பொறுப்பேற்ற இவர், 2002-ல் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்காக வாதாட மூத்த வழக்கறிஞர் கே.டி.துளசி வர மறுத்ததால், அந்த இடத்தை ஆர்.பசன்ட் நிரப்பினார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஆர்.பசன்ட் 8 நாட்கள் வாதிட்டார்., ‘அரசியல் காழ்ப்புணர்வுடன் ஜெயலலிதா,சசிகலா மீது திமுக வழக்கு தொடுத்தது. இதில் கூட்டுசதி, பினாமி பரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் ஆதாரம் காட்டமுடியாத இந்த குற்றச்சாட்டை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்ற பசன்ட்டின் வாதத்தை குமாரசாமி, தனது தீர்ப்பில் எதிரொலித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மூத்த வழக்கறிஞருமான சுதந்திரம் மேல்முறையீட்டு வழக்கில் சுதாகரன், இளவரசிக்காக வாதாடினார். 33 ஆண்டுகளாக குற்றவியல்,சிவில் வழக்குகளில் ஆஜராகியுள்ள அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
இவர் வாதிட்ட 6 நாட்களும் குமாரசாமி கேள்வி மேல் கேள்வி, குறுக்கு கேள்வி, கிடுக்கிப்பிடி கேள்வி என பலவிதமாக சுதந்திரத்திடம் கேள்விகளை எழுப்பினார். அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்த சுதந்திரம், சுதாகரனின் திருமண செலவு, சூப்பர் டூப்பர் டிவி சந்தா, இளவரசிக்கு சொந்தமான நிறுவனங்கள் தொடர்பாக விளக்கினார்.
சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கு அரசியல் தலையீடுகளின் காரணமாக 2013-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் ஜோதியில் தொடங்கி பி.குமார் வரை பலர் மாறிவிட்டனர். நீதிபதிகளில் ஏ.எஸ்.பச்சாப்புர்ரேவில் தொடங்கி சி.ஆர்.குமாரசாமி வரை பலர் மாறிவிட்டனர். 12 ஆண்டுகளாய் இவ்வழக்கில் மாறாத ஒரே நபர் வா.புகழேந்தி மட்டுமே.
கர்நாடக மாநில அதிமுக செயலாளரான புகழேந்தி, முதல் ஆளாக நீதிமன்றத்துக்கு வருவார். கட்சித் தலைவர்களை வரவேற்று, ஊருக்கு அனுப்பி வைக்கும்வரை அனைத்தையும் கவனித்துக்கொள்வார். நீதிமன்ற நடவடிக்கைகளை தினமும் கவனித்து கார்டனுக்கு தகவல் தெரிவிப்பார்.
கடந்த 2006-ல் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரான சில நாட்களில், நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிபதி ஏ.எஸ்.பச்சாப்புர்ரே பிடிவாரண்ட் பிறப்பிக்க தயாரானார். மதிய உணவு இடைவேளையில் புகழேந்தியும், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கந்தசாமியும் சேர்ந்து ஆச்சார்யாவை சந்தித்துப் பேசினர். இதன் காரணமாக நீதிமன்றம் கூடியதும் எழுந்த ஆச்சார்யா, 'பிடிவாரண்ட் பிறப்பிக்கும் அளவுக்கு, வழக்கு இன்னும் முக்கிய கட்டத்தை எட்டவில்லை' என்று வாதிட்டார்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருந்தபோது உணவு, மருந்து, நாற்காலியில் தொடங்கி செய்தித்தாள் வரை அத்தனை ஏற்பாடுகளையும் புகழேந்தி செய்தார். ரூ.100 கோடி அபராதம் என பெரிய தொகை இருந்த போதும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுத்த உடன் புகழேந்தியின் மனைவி குணஜோதி ஜெயலலிதாவுக்கும், இளவரசிக்கு புகழேந்தியும் ஜாமீன் பொறுப்பேற்பு கையெழுத்து போட்டனர்.
மேல்முறையீட்டு விசாரணை நடந்த 3 மாதங்களும் மூத்த வழக்கறிஞர்களுடன் விவாதத்தில் கலந்து கொண்டார். வழக்கு நடக்கும்போது நீதிமன்றத்துக்கு வரும் புகழேந்தி, விடுமுறை நாட்களில் கோயில்களுக்கு சென்று வழிபட்டார். ஜெயலலிதா விடுதலை என நீதிமன்றம் அறிவித்த மறுகணம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பட்டாசுகளை கொளுத்தி புகழேந்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
(இன்னும் வருவார்கள்)