எல்லைப் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்காக, மத்திய பாதுகாப்புப் படைகளில் 11,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் மற்றும் ஐடிபிபி போன்ற துணை ராணுவப் படைகளில் 8,533 பெண்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், எல்லைப் பாதுகாப்புப் பணிகளுக்காக 2017-க்குள் 2,722 பெண்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "எதிர்வரும் காலங்களில் மத்திய பாதுகாப்புப் படைகளில் 5 சதவீத அளவில் பெண்களை நியமிக்கும் விதத்தில் இந்த பணிவாய்ப்புக்கு வித்திட்டப்பட்டுள்ளது. தற்போது மத்திய பாதுகாப்புப் படைகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கை 2.15 சதவீதம் மட்டுமே உள்ளது" என்றார்.
மத்திய பாதுகாப்புப் படைகளில் சேருவதற்கு மூன்று அடுக்கு தேர்வுகள் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 வயதில் இருந்து 23 வயது வரை ஆகும். மத்திய அரசின் சலுகைகளுடன் ரூ.20,200 மாத ஊதியம் கிடைக்கும்.