டெல்லியில் ஊழல் புகார்களை தொலைபேசியில் தெரிவிக்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் 1.25 அழைப்புகள் இப்பிரிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆம் ஆத்மி அரசு அமைந்தது. ஊழல் புகார்களை தொலைபேசியில் தெரிவிக்கும் திட்டத்தை முதல்வர் கேஜ்ரிவால் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி மீண்டும் தொடங்கி வைத்தார்.
அப்போதிருந்து ஒரு மாதத்துக்குள் அந்த தொலைபேசி எண்ணுக்கு 1,25,065 அழைப்புகள் வந்துள்ளன.
இதுதொடர்பாக ஓர் அதிகாரி கூறியதாவது: ஒரு மாதத்தில் 1.25 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. இதில், 1,10,380 அழைப்புகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 510 புகார்கள் பதிவு செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. இவற்றில், 252 புகார்கள் ஊழல் தடுப்புப் பிரிவால் விசாரிக்கத் தகுதியானவை என கண்டறியப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில், ஊழல் தடுப்புப் பிரிவால் 79 புகார்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. 169 புகார் களை விசாரித்து வருகின்றனர். 7 வழக்குகள் முடிக்கப்பட்டு விட்டன. 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
600 புகார்கள் தகுதியுடைய புகார்கள் போல இருப்பினும், போதுமான ஆதாரங்கள் அளிக்கப்படவில்லை. இருப்பினும் இப்புகார்கள் கண்காணிப்பில் உள்ளன.
ஊழலுக்குத் தொடர்பில்லாத அதேசமயம் பல்வேறு குறைகளும் புகார்களாக வருகின்றன. இதுவரை வந்துள்ள புகார்களில் உள்ளாட்சித் துறை, காவல்துறை, போக்குவரத்து, குடிநீர் வாரியம் ஆகியவற்றின் மீதுதான் ஏராளமான புகார்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த எண்ணுக்கு வரும் அனைத்து அழைப்புகளுக்கும் பதில் சொல்லப்படும் என்பதை உறுதி செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.