கேரளாவில் தற்கொலை செய்து கொண்ட விளையாட்டு வீராங்கனை அபர்ணா குடும்பத்துக்கு இந்திய விளையாட்டு ஆணையம் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கியது.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குனர் ஸ்ரீனிவாஸ் அபர்ணா பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள இந்திய விளையாட்டு பயிற்சிய ஆணைய மையத்தில் படகுப் போட்டி வீராங்கனைகள் 4 பேர் பயிற்சி பெற்று வந்தனர். மூத்த வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் சேர்ந்து நான்கு வீராங்கனைகளை யும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாகக் கூறப் படுகிறது.
இதன் காரணமாக ஆணையத்தின் விடுதியில் தங்கியிருந்த அவர்கள் 4 பேரும் கடந்த 6-ம் தேதி விஷப் பழங்களை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இதில் அபர்ணா (15) என்பவர் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய விளையாட்டு ஆணையம் அபர்ணா குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி உதவி வழங்கியது. இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குனர் ஸ்ரீனிவாஸ் அபர்ணா பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அபர்ணா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் ஸ்ரீனிவாஸ் உறுதி அளித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று வீராங்கனைகளுக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்பட்டது. அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கும் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அபர்ணாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அபர்ணாவின் தற்கொலை முடிவுக்குக் காரணம் மூத்த விராங்கனைகள் கொடுத்த துன்புறுத்தல்கள்தான் என்று அபர்ணாவின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இந்தக் குற்றச்சாட்டை மூத்த வீராங்கனைகள் மறுத்துள்ளனர்.
இதனிடையே விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.