உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிம் மாநிலங்களில் மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளுக்குத் தடை விதிக்க தீவிரமாக ஆலோசிக்கப்படும் நிலையில், கர்நாடக அரசும் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய கர்நாடக மாநில உணவு மற்றும் பொது வழங்கல் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், "மகாராஷ்டிரம், உத்திரப் பிரதேச மாநிலங்களின் ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில், இந்த உணவு வகையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாகி நூடுல்ஸ் உணவைப் பரிசோதிப்பதற்கும் நடவடிக்கைக்கு, மாநில சுகாதாரத் துறையைக் கேட்டுக்கொண்டுள்ளோம். அந்த ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டியது உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் கடமை. மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் தடை செய்யப்பட வேண்டும். இந்த வாரத்திலேயே நூடுல்ஸ் பாக்கெட் மாதிரிகள் சோதனைக் கூடத்துக்கு அனுப்பப்படும். பின்னர், அதன் முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும்" என்றார் அவர்.