உத்தரப் பிரதேசத்தில் காரில் சென்றபோது ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி அபராதம் விதிக்கப்பட்ட வினோத சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக மீரட் நகரைச் சேர்ந்த சைலேந்தர் சிங் (43) என்பவர் ஊடகங்களிடம் கூறியது: நான் எனது 4 வயது மகனுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள ஹசன்பூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தேன். எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அவசரமாக சென்று கொண்டிருந்தேன். அப்போது எனது காரை மடக்கிய போக்குவரத்து காவலர் ஒருவர், ஓட்டுநர் உரிமத்தை காண்பிக்குமாறு கேட்டார். நானும் உரிமத்தை காண்பித்தேன். அனைத்து ஆவணங்களையும் அந்த காவலர் பரிசோதித்தார். அவை அனைத்தும் சரியாக இருந்தன.
எனினும் காரை அங்கிருந்து எடுக்க அனுமதிக்கவில்லை. இறுதியாக ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி எனக்கு அபராதம் விதித்தார். அதற்கான ரசீதையும் வழங்கினார். இது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று சைலேந்தர் சிங் கூறினார். இந்நிலையில் அவரிடம் அபராதம் வசூலித்தது தொடர்பாக காவலர் சிவராஜ் விளக்கமளித்துள்ளார். அதில், செல்போனில் பேசியவாறு காரை ஓட்டி வந்ததால்தான் அபராதம் விதிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்ததற்கான ரசீது தவறாக வழங்கப்பட்டுவிட்டது. அவரிடம் அபராதம் வசூலித்து ரசீது வழங்குமாறு உடனிருந்த காவலரிடம் கூறினேன். அவர் தவறுதலாக வேறு ரசீதை வழங்கிவிட்டார். அதனை வைத்துக் கொண்டு தனது தவறை மறைக்க அந்த நபர் நாடகமாடுகிறார் என்று காவலர் சிவராஜ் கூறியுள்ளார்.