இந்தியா

கட்டுரை எழுதத் தெரியாத ஆசிரியர் மீது வழக்கு: ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

மிக அரிய சம்பவமாக ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம், ஆசிரியர் ஒருவரின் திறனை சோதிக்க, நீதிமன்ற அறையிலேயே நேற்று முன்தினம் சிறிய தேர்வு நடத்தியது.

இதில் அந்த ஆசிரியர் படுதோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த நீதிமன்றம், அவருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்ய உத்தரவிட்டது. மேலும் போலி கல்வி நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

தெற்கு காஷ்மீரில் உள்ள ஒரு பள்ளியில் முகம்மது இம்ரான் கான் என்பவர் ஆர்.இ.டி. என்கிற கல்வி வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப் பட்டதற்கு எதிராக ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

“டெல்லியில் உள்ள மேல்நிலைக் கல்வி வாரியம், நாகாலாந்தில் உள்ள குளோபல் திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆகியவை இம்ரான் கானுக்கு கல்விச் சான்றிதழ்களை வழங்கியுள்ளன. இவை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்ல” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

டெல்லியில் உள்ள மேல்நிலைக் கல்வி வாரியம் அளித்த மதிப்பென் சான்றிதழில் இம்ரான் கான் உருது, ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் முறையே 74%, 73% மற்றும் 66% மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி முசாபர் உசேன் அட்டார், நீதிமன்ற அறையிலேயே இம்ரான் கானிடம் எளிய ஒரு வாக்கியத்தை கொடுக்கச் செய்து ஆங்கிலத்தில் இருந்து உருதுவுக்கு மொழிபெயர்க்குமாறு கூறினார். இதுபோல் உருதுவில் ஒரு வாக்கியம் தரப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு கூறப்பட்டது. ஆனால் இம்ரான் கானோ இதில் தினறிப்போனார்.

பிறகு பசு பற்றி உருதுவில் சிறிய கட்டுரை எழுதுமாறு நீதிபதி கூறினார். இதில் இம்ரான் கான், நீதிமன்ற அறையில், அறைக்கு வெளியே என 2 முறை முயற்சி செய்தும் தோல்வி அடைந்தார். இதையடுத்து தனக்கு கணக்கு நன்றாக வரும் என்று இம்ரான் கான் கூறியதால் 4-ம் வகுப்பு கணக்கு ஒன்றை கொடுத்து விடை காணுமாறு கூறப்பட்டது. இதிலும் அவர் தோல்வி அடைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி, இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

மேலும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்த நீதிபதி, அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களின் பட்டச் சான்றிதழ் களை சமர்ப்பித்த ஆர்.இ.டி. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை சோதிக்க அவர்களுக்கு தேர்வு நடத்தவும், இதற்காக ஒரு குழுவை அமைக்கவும் மாநில கல்வித் துறைக்கு உத்தரவிட்டார்.

“இத்தேர்வில் தேர்ச்சி பெறாத வர்களின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யலாம். சமூகம் மற்றும் மாணவர் சமுதாயத்தின் நலன் கருதி இவர்களை பதவி நீக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களை ரெகுலர் ஆசியர் களாக நியமிக்கவேண்டும்.

தேர்வு நடத்தாமலேயே பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. எனவே தின்பண்டக் கடைகள் போல பெருகி யுள்ள போலி கல்வி நிறுவனங்களுக்கு எதிராக மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்து, அவற்றின் உரிமையாளர்கள், அதில் பயிலும் மாணவர்கள் மற்றும் பிறருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் நீதிபதி உத்தர விட்டார்.

SCROLL FOR NEXT