டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த ஒரு வாரத்தில் நியமனம் செய்த அனைத்து உயர் அதிகாரிகள் நியமனங்களையும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நேற்று ரத்து செய்தார்.
இதுதொடர்பாக கேஜ்ரி வாலுக்கு நஜீப் ஜங் எழுதியுள்ள கடிதத்தில், “எழுத்தர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை அனை வரையும் நியமிக்கவும் பணியிட மாற்றம் செய்யவும் அதிகாரம் உடையவர் துணைநிலை ஆளுநர் தான்” என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் அரசு உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக கேஜ்ரிவா லுக்கும் நஜீப் ஜங்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் நேற்று முன்தினம் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட்டதன் மூலம் இந்தப் பிரச்சினை உச்சகட்டத்தை அடைந்தது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கேஜ்ரிவால் நேற்று கடிதம் எழுதினார். அதில், டெல்லி நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், கேஜ்ரிவாலும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் டெல்லி நிர்வாகப் பிரிவு உயர் அதிகாரிகளை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று முன்தினம் சந்தித்த பிறகு கேஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும் கூறிய தாவது:
துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட்டுள்ளோம். குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது இருந்த தைப் போல, டெல்லி அரசை நடத்த துணைநிலை ஆளுநர் முயற்சிக்கிறார். முதல்வரை ஒதுக்கிவைத்துவிட்டு, அதிகாரி களுக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவுகளை பிறப்பிக்கிறார். இந்த நிலை தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு எங்கே இடம் இருக்கிறது.
எங்களுடைய எதிர்ப்பை தெரி வித்தபோதிலும் அதையும் மீறி சகுந்தலா காம்ளினை தலைமைச் செயலாளராக (பொறுப்பு) நியமிக்குமாறு நிர்பந்தித்தார். பின்னர் நாங்கள் அதற்கும் ஒப்புதல் அளித்தோம். இப்போது, செயலாளர்கள் நியமனத்திலும் நஜீப் ஜங் தலையிடுகிறார். இவ்வாறு கூறியிருந்தனர்.
பின்னணி
கடந்த 15-ம் தேதி பொது நிர்வாகத் துறை செயலாளராக இருந்த அனிந்தோ மஜும்தார், நஜீப் ஜங் உத்தரவின் பேரில் சகுந்தலா காம்ளினை தலைமைச் செயலாளராக நியமித்தார். இதனால் அதிருப்தி அடைந்த கேஜ்ரிவால், கடந்த திங்கள்கிழமை மஜும்தாரை அப்பதவியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை ராஜேந்திர குமாரை முதன்மைச் செயலா ளராக (பணியாளர்) நியமித்து கேஜ்ரிவால் பிறப்பித்த உத்தரவை நஜீப் ஜங் ஏற்க மறுத்தார்.
மேலும் உள்துறை செயலா ளராக இருந்த அர்விந்த் ராயை நஜீப் ஜங் அந்தப் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார். ஆனால் அர்விந்த் ராயை பொது நிர்வாகத் துறை செயலாளராக கேஜ்ரிவால் நேற்று முன்தினம் நியமித்தார். நஜீப் ஜங் சட்டத்துக்கு புறம்பாகக் கூறுவதை எல்லாம் ஏற்க முடியாது என டெல்லி அரசு தெரிவித்தது.