தெலங்கானாவில் நேற்று அதிகபட்சமாக 48 டிகிரியும் ஆந்திராவில் 47 டிகிரியும் வெயில் கொளுத்தியது. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் நேற்று ஒரே நாளில் 135 பேர் பலியாயினர்.
கடந்த 4-ம் தேதி தொடங்கிய ‘அக்னி நட்சத்திரம்’, வரும் 29-ம் தேதி வரை நீடிக்கிறது. இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த இரு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கத்துக்கு 427 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றும் இவ்விரு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 54 பேரும், தெலங்கானாவில் 81 பேரும் வெயில் தாங்க முடியாமல் பலியாயினர். ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 16 பேரும் விஜயநகரம் மாவட்டத்தில் 10 பேரும் உயிரிழந்தனர்.
இதேபோல தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 81 பேர் நேற்று ஒரே நாளில் வெயிலுக்கு பலியாயினர். இதில் அதிகபட்சமாக வாரங்கல் மாவட்டத்தில் 25 பேரும், கரீம் நகர் மாவட்டத்தில் 12 பேரும், நல்கொண்டா மாவட்டத்தில் 17 பேரும் பலியாயினர்.
தெலங்கானா மாநிலத்தில் அதிகபட்சமாக கம்மம் மாவட்டத்தில் 48 டிகிரியும், நல்கொண்டா, கரீம் நகர், நிஜாமாபாத் ஆகிய மாவட்டங்களில் 47 டிகிரியும், வாரங்கல் 46, ஆதிலாபாத் 45, ஹைதராபாத் 44, மகபூப் நகர் 43, மேதக் 42 டிகிரியும் வெயில் பதிவானது.
ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் அதிகபட்சமாக 47 டிகிரியும், குண்டூர் 46, பிரகாசம் 45, மேற்கு கோதாவரி 44, விஜய நகரம், கிழக்கு கோதாவரி, நெல்லூர், சித்தூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களில் 42, அனந்தபூர், கடப்பா மாவட்டங்களில் 41, ஸ்ரீகாகுளம் 38, விசாகப்பட்டினம் 37 டிகிரியும் வெயில் பதிவானது.
மேலும் இரண்டு நாட்களுக்கு வெயி லின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் விசாகப்பட்டினம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடும் வெயில் காரணமாக நகர்ப்புறங்களில் முக்கிய சாலைகள் பகல் பொழுதில் வெறிச்சோடி காணப்பட்டன.