இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் பரிதாபம் - பள்ளத்தில் கவிழ்ந்து பஸ் தீப்பிடித்தது: 50 பேர் பலி

செய்திப்பிரிவு

மத்தியப் பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் பயணிகள் பஸ் கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 50 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சொகுசு பஸ் மத்தியப் பிரதேசத்தின் சாகத்பூர் நகரில் இருந்து சாட்னா நகருக்கு நேற்று புறப்பட்டது. அந்த பஸ்ஸில் சுமார் 55 பயணிகள் இருந்தனர்.

தேசிய நெடுஞ்சாலை 75-ல் மாட்லா காட் என்ற பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டீசல் டேங்க் தீப்பிடித்து பஸ் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. பஸ்ஸுக்குள் சிக்கிக் கொண்ட 50 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

சிலர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத் துக்கு விரைந்து வந்த தீயணைப் புப் படை வீரர்கள் தீயை அணைத்து பயணிகளின் உடல்களை மீட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அனுதாபம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் லேசான காயமடைந்த வர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

          
SCROLL FOR NEXT