மகாராஷ்டிர மாநிலத்தில் தனது செல்போனில் அம்பேத்கரின் பாடலை ரிங்டோனாக வைத்தி ருந்த தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த தகவலை போலீஸார் தெரிவித்தனர்.
அகமது நகர் மாவட்டம் ஷிர்டி நகரைச் சேர்ந்தவர் சாகர் ஷேஜ்வார். நர்ஸிங் படிப்பு மாணவரான இவர், கடந்த 16-ம் தேதி தனது உறவினர்கள் இரண்டு பேருடன் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது செல்போனுக்கு வந்த ஓர் அழைப்பில், ரிங் டோனாக ‘கர கிதிகி ஹல்லா’ என்ற வார்த்தைகளைக் கொண்ட அம்பேத்கரை புகழும் பாடல் ரிங்டோனாக ஒலித்துள்ளது.
இதையடுத்து, அருகில் இருந்த 8 இளைஞர்கள், இந்த ரிங்டோனை உடனடியாக நிறுத்துமாறு கூறி அடித்துள்ளனர். பின்னர் அந்த இளைஞரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வனப்பகுதிக்குச் சென்று அடித்துள்ளனர். இதில் சாகர் இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஷிர்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக, கோவா மாநிலத்தில் 2 பேர், புணேயில் ஒருவர், ஷிர்டியில் ஒருவர் என 4 பேரை கைது செய் துள்ளதாக ஷிர்டி காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கடையில் வைக்கப்பட்டி ருந்த சிசிடிவி கேமராவில் பதி வான காட்சிகளைக் கொண்டு அந்த இளைஞர்களை அடையாளம் கண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.