மது அருந்திவிட்டு தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்கவும், நான்கு பேர் காயமடையவும் காரணமாக இருந்ததாக இந்தி நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த 2002 செப்டம்பர் 28-ம் தேதி இரவு, தாறுமாறாக ஓடிய நடிகர் சல்மான் கானின் கார் பந்த்ரா பகுதியில் ஒரு பேக்கரியின் வெளியே படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் நூருல்லா மெஹ்பூப் ஷெரீப் என்பவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
இவ்வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
அந்தக் காரை நடிகர் சல்மான் கான் ஓட்டியதாகவும், அப்போது அவர் மது போதையில் இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், “காரை ஓட்டியது தான் அல்ல. தனது டிரைவர் அசோக் சிங்தான்” என சல்மான் கான் தரப்பில் வாதிடப்பட்டது.
இவ்வழக்கில் பெருநகர குற்ற வியல் நீதிமன்ற நீதிபதி டி.டபிள்யூ தேஷ்பாண்டே இன்று தீர்ப்பு வழங்குகிறார். இவ்வழக்கில் சல்மான் கான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்படலாம்.