லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியில் இருந்து அதன் மக்களவை உறுப்பினரான பப்பு யாதவ் என அழைக்கப்படும் ராஜேஷ் ரஞ்சன் யாதவ் இன்று ஆறு வருடங்களுக்காக நீக்கப்பட்டிருக்கிறார். இவர் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பப்பு மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிஹாரின் கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம் பெற்றவரான பப்பு யாதவ், ஆர்.ஜே.டியின் தலைவர் லாலுவிற்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுபவர். இவர், தம் கட்சி ஜனதா பரிவாருடன் இணைய துவக்கம் முதலாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இத்துடன், பிஹாரின் முன்னாள் முதல்வரான ஜிதன்ராம் மாஞ்சியை அடிக்கடி சந்தித்ததுடன் அவருக்கு ஆதரவாகவும் தொடர்ந்து பேசி வந்தார். மாஞ்சியையும் ஜனதா பரிவாரில் சேர்க்க வேண்டும் எனவும், அவர் இன்றி அந்தக் கட்சி முழுமை பெறாது எனவும் கூறி வந்தார். ஆனால், ஜனதா பரிவாரில் இணைந்த லாலு மற்றும் பிஹாரின் முதல் அமைச்சர் நித்திஷ்குமாருக்கும் எதிராகப் பேசியதுடன் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும் மாஞ்சி செயல்பட்டு வந்தார்.
மக்களவை தேர்தலுக்கு பின் பிஹார் மாநிலத்தில் முதல் அமைச்சராக பிப்ரவரி 20 வரை இருந்தார் மாஞ்சி. இவருக்கு எதிராக நித்திஷ்குமாரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களை ஒன்று சேர்ப்பதில் பப்பு முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது. இதனால், பப்பு தம் கட்சியால் பலமுறை எச்சரிக்கப்பட்டதுடன், கடந்த வாரம் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது, கட்சியின் இருந்து ஆறு வருட காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளார் பப்பு யாதவ்.
இதற்கான உத்தரவை ஆர்.ஜே.டியின் பொதுச்செயலாளரான ராம்தியோ இன்று பப்புவிற்கு அனுப்பியுள்ளார். அதில், ஆர்.ஜே.டி தலைவர் லாலுவிற்கு எதிராக அறிக்கை அளித்ததுடன், அவரது படத்தை அனுமதி இன்றி பப்பு தாம் நடத்திய ‘யுவா சக்தி’ கூட்டங்களில் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பப்புவிடம் கேட்கப்பட்ட போது, ’என்னை பொருத்தவரை இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இது பற்றி எங்கள் தலைவர் லாலுஜியிடம் பேசி தீர்க்கப்படும்.’ எனக் கூறுகிறார்.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட லாலு, அவரது அரசியல் வாரிசாக தம்மை அறிவிப்பார் என பப்பு எதிர்பார்த்தார். அவர் வெளிப்படையாகவும் கூறியதை லாலு ஏற்க மறுத்து விட்டார். இதன் காரணமாக, ஜனதாவின் ஒன்றிணைப்பிற்கு பின் ஆர்.ஜே.டி கட்சியை கைப்பற்றி, மாஞ்சியுடன் கூட்டணி வைத்து பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பப்பு முயன்றதாகக் கருதப்படுகிறது. இதற்கு பப்புவிற்கு ஆதரவளிக்க ஆர்.ஜே.டியின் சில எம்.எல்.ஏக்களும் தயாராகி வந்ததாகக் கூறப்பட்டது. இதனால் ஆர்.ஜே.டியை கைப்பற்றும் பப்புவின் இந்த முயற்சியை முறியடிக்கும் விதத்தில் லாலு அதற்கு முன்பாக அவரை கட்சியில் இருந்து நீக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவை எதிர்த்து மதேபுரா தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பப்பு, 1998-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அஜித் சர்கார் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிக்கியவர். இதற்காக கைதாகி பல வருடங்கள் சிறையிலும் இருந்தவருக்கு எதிராக சாட்சிகள் இல்லை என்பதால் 2013-ல் விடுதலை கிடைத்தது. இவரது மனைவியான ரஞ்சிதா ரஞ்சன் காங்கிரஸின் சார்பில் சுபோல் தொகுதி எம்பியாக இருக்கிறார்