டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடைய மோதல் நிலவும் நிலையில், ஆளுநருக்கே முழு அதிகாரம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
டெல்லி தலைமைச் செயலாளர் பதவியில் சகுந்தலா காம்ளினை ஆளுநர் நியமித்தார். இதற்கு கேஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு முற்றியது. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர் காம்ளின் என்பது கேஜ்ரிவால் தரப்பு வாதம்.
இதனைத் தொடர்ந்து, "டெல்லி அரசை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்" என்று பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு பதில் அளிக்கும் விதமாக உள்துறை அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில், யூனியன் பிரதேசமாகவும் தேசத்தின் தலைநகராகவும் இருக்கும் டெல்லியின் ஆளுநர் தன்னிச்சையாக செயல்படலாம். சட்டம் ஒழுங்கு, காவல்துறை, மத்திய அரசு உடனான செயல்பாடுகள், நியமனங்கள் உள்ளிட்டவற்றில் முதல்வரோடு கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை. குடியரசுத் தலைவர் ஆளுநருக்கு அளித்துள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு அவர் நடந்து கொள்ளலாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.