சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கிவைத்தார். அப்போது அந்த மாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியா, சாதாரண உடையில் கருப்பு கண்ணாடி அணிந்து பிரதமரை வரவேற்றார்.
பிரதமர் போன்ற முக்கிய தலைவர்களை சந்திக்கும்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கோட், சூட் அணிவது வழக்கம். அமித் கட்டாரி சாதாரண உடை, கருப்பு கண்ணாடி அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி அந்த மாநில அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் தனது நிலை குறித்து சக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் அமித் கட்டாரி தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
பஸ்தர் பகுதியில் தாங்க முடியாத வெயில் கொளுத்துகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் மணிக் கணக்கில் கோட், சூட் அணிந்து விழா ஏற்பாடுகளை கவனிப்பது இயலாத ஒன்று. பிரதமரை சந்தித்தபோது பருவத்துக்கு தகுந்த ஆடை அணிந்திருந்தேன். அன்றைய தினம் சாதாரண நீல சட்டை, கருப்பு பேன்ட், கருப்பு ஷூ அணிந்திருந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.