இந்தியா

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்

இரா.வினோத்

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இறுதி வாதத்தைத் தொடர்ந்தார்.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசா ரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார். அர‌சுத் தரப்பில் 231-வது சாட்சியான செங்கல் பட்டு வட்டாட்சியர் ஜெகநாதன் அளித்த வாக்குமூலத்தை அவர் வாசித்தார்.

அதில் “1991-96-ல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, சசிகலாவும் அவரது உறவினர்களும் பையனூர், சிறுதாவூர், கருங்குளம் ஆகிய பகுதிகளில் பண்ணை வீடு கட்டுவதற்காக பல ஏக்கர் நிலங்களை வாங்கினர்.

அப்போது அவர்கள் தங்கள் நிலத்திற்கு அருகே இருந்த ஏரி, குளம் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான 100-க் கும் மேற்பட்ட‌ புறம்போக்கு நிலங்களை முறைகேடாக ஆக்கிரமித்தனர். சசிகலாவும், அவரது உறவினர்களும் முதல்வருக்கு நெருங்கியவர்கள் என்பதாலேயே இவ்வாறு நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர்” என குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல் முகமது ஹுசேன் என்கிற பி.டி.ஓ. அதிகாரி அளித்துள்ள வாக்குமூலத்தில், “ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறுதாவூரில் பண்ணை வீடு கட்ட விண்ணப்பித்தார். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து, உடனே நிலம் ஒதுக்கும்படி தொலைபேசியில் சொன்னதால், உடனடியாக ஆவணங்களை சரிபார்க்காமல் நிலம் வழங்கினேன்” என்று கூறியுள்ளார்.

சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி மேலாளர் கோவிந்தராஜன் அளித்த வாக்குமூலத்தில், “சசிகலா பங்குதாரராக இருந்த ராம்ராஜ் அக்ரோ ஃபார்ம் நிறுவனத் துக்கு ரூ.50 லட்சம் கடன் வழங்கும்படி ஜெயலலிதாவின் உறவினர் சுஜித்ரா தொலைபேசியில் கூறினார். முதல்வருக்கு நெருக்கமானவர் என்பதால் உரிய ஆவணங்கள் இல்லாமலேயே கடன் வழங்கினேன்” என்று கூறியதையும் பவானி சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்து ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்த சுப்பிரமணியன் சுவாமி அளித்த வாக்குமூலத்தை பவானி சிங் வாசித்தார்.

அதில், “1991 - 96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மாதம் ரூ.1 தான் ஊதியமாகப் பெற்றார்.

ஆனால் இக்காலகட்டத்தில் அவரது பெயரிலும், அவருக்கு நெருக்கமானவர்கள் பெயரிலும் பல கோடி ரூபாய் சொத்துக்களை குவித்திருப்பதாக எனக்கு ஆதாரப்பூர்வமாக தகவல்கள் கிடைத்தன.

இதைத்தொடர்ந்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், ‘ரூ.1 ஊதியம் பெற்ற ஜெயலலிதா பல கோடி ரூபாய் சொத்துக்களை குவித்தது எப்படி?' என கேள்வி எழுப்பி 13.04.1996-ல் வழக்குப் பதிவு செய்தேன்” என்று கூறியிருப்பதை அடிப்படையாக வைத்து அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து, அப்போது சென்னை காவல்துறை ஆணையராக இருந்த லத்திகா சரண் அளித்த வாக்குமூலமும் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அதில், “ஜெயலலிதா மீதான புகாரை விசாரிக்குமாறு காவல் துறைக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே விசாரணை அதிகாரியாக நல்லம்ம நாயுடுவை நியமித்து, ஜெயலலிதாவின் வீடுகளில் சோதனை நடத்தினோம்” என்று கூறியுள்ளார்.

அரசு வழக்கறிஞர் பவானி சிங் இன்றும் தனது இறுதிவாதத்தை தொடர்கிறார்.

SCROLL FOR NEXT