தொலைத்தொடர்பு நிறுவனங் களின் கோரிக்கைப்படி ‘ஸ்பெக்ட்ரம் தொடர்பான அனுமதியை, மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வோடாபோன், ஏர்டெல், ஐடியா செல்லுலார் போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கப்பட்டுள்ளது. இருபது ஆண்டு களுக்கு வழங்கப்பட்ட அந்த அனுமதி முடிவடைந்து விட்டது. இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் அனுமதியை மத்திய அரசிடம் இந்த நிறுவனங்கள் ஒப்படைத்தன. ஆனால், மேலும் 10 ஆண்டுகளுக்கு ஸ்பெக்ட்ரம் அனுமதியை நீட்டிக்க கோரி, இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு விண்ணப்பித்தன.
ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விண்ணப்பங் களை மத்திய அரசு நிராகரித்து விட்டது. அத்துடன், ஏலம் மூலம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கப்படும் என்று மத்திய அரசு அறி வித்தது. இந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொலை தொடர்பு நிறுவனங்கள் வழக்கு தொடுத்தன.
அதில், ‘ஸ்பெக்ட்ரம் அனு மதியை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசுக்கு உத்தர விட வேண்டும்’ என்று கோரி இருந்தன. ‘இருபது ஆண்டுகள் ஸ்பெக்ட்ரம் அனுமதி முடிந்த பிறகு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக் கப்படும்’ என்று மத்திய அரசு கூறியது. அதன்படி, எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தன.
இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், ‘‘மேலும் 10 ஆண்டு களுக்கு அனுமதி நீட்டிக்கப்படலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. அனுமதியை நீட்டிக்கவோ அல்லது ரத்து செய்யவோ மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது’’ என்று தெரிவித்தது.
இந்நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மனுக் களை நீதிபதி ஜே.செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர், ‘‘தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததாக இல்லை. எனவே, அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’’ என்று நீதி பதிகள் உத்தரவிட்டனர்.