ஆன்மிக அமைப்பு சார்பில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சாமியார் களுக்காக பெண் நிருபரை இடம் மாறி அமரச் சொன்ன விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என சிவ சேனா வலியுறுத்தியுள்ளது.
பசு வதை தடைச்சட்டம் கொண்டு வந்ததற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு சாண்டாகுரூஸ் ஜெயின் தபாக்கச்சா சங் சார்பில் பாராட்டுக் கூட்டம் நடந்தது. இவ்விழாவில் பத்திரிகையாளர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட் டிருந்தது.
இதில், மராத்தி செய்தி சேனலுக் காக அதன் நிருபர் ராஷ்மி புரானிக் பங்கேற்று, முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வரும் சாமியார்களுக்காக ராஷ்மி புரானிக்கை வேறு இடத்துக்கு மாறி அமரும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மத விழா அல்ல என்றும், செய்தியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் அமர்ந்துள்ளேன் என்றும் புரானிக் வாதாடியும் பலன் இல்லை. அவர் பின்வரிசையில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீ சாண்டா குரூஸ் ஜெயின் தபாக்கச்சா சங் அமைப்பின் பச்சுபாய் ஷா கூறும்போது, “ஜைனத்தில் ஜாதி, ஆண், பெண் பாகுபாடு இல்லை. அனைத்து உயிர்களும் சமமானவையே என்ற மகாவீரரின் கோட்பாட்டில் நம்பிக்கையுடைய வர்கள் நாங்கள். பெண்ணை அவமதித்தது என்ற கேள்விக்கே இடமில்லை. பெண்களுக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று அமரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டோம். முன்வரிசை நாற்காலிகள் பாதையின் நடுவில் இருந்ததால், சாமியார்கள் மேடைக்கு வருவதற்கு இடையூ றாக இருந்தது. ஆகவே, அந்த பெண் நிருபரை நகரச் சொன்னோம்” என்றார்.
இச்சம்பவம் முதல்வரின் கவனத்துக்கு தெரிய வந்ததும் அதே மேடையில் அவர் பெண்களுக்கு எதிரான பாரபட்சம் பற்றி பேசினார். “பெண்கள் மீதான பாரபட்சம் நல்ல சமூகத்துக்கான அடையாளம் அல்ல. நாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்பட்டால் மட்டுமே முன்னேறிய சமூகம் என்பது சாத்தியம்” என்றார்.
இதனிடையே இச்சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள சிவ சேனா தலைவர் நீலம் கோரோ, “மேடையிலேயே கண்டனம் தெரிவித்த முதல்வர் சரியாக நடந்துகொண்டிருக்கிறார். இனி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்புக்கோர வேண்டும். மத அமைப்புகள் தங்களிடமுள்ள முரண்பாடுகளை உணர்ந்து கொண்டு, அதனை மாற்றிக் கொள்ள முயல வேண்டும். பெண் குடியரசுத் தலைவர், பிரதமர், பேரவைத் தலைவர், 50 சதவீ இட ஒதுக்கீடு என்ற யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெண் என்பதற்காக பாரபட்சம் காட்டப் படுவது தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.