உத்தரப் பிரதேச மாநிலம் காசிம்பூரில் உள்ள ஹர்துவாகுஞ்ச் அனல் மின் நிலையத்தில் நேற்று காலை பாய்லர் ஒன்று வெடித்தது. இதில் 3 பேர் பலியாயினர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து கூடுதல் மாவட்ட மஜிஸ்திரேட் அவ்தேஷ் திவார் கூறும்போது, "பணியாளர்கள் மின் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த பாய்லர் திடீரென வெடித்துள்ளது. அதற்கான காரணம் என்னவென்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அனல் மின் நிலையத்தைச் சுற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். அவர்களில் 7 பேர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள நேரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதர பணியாளர்கள் வேறு சில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.