இந்தியா

சல்மான் வழக்கு ஆவணங்கள் எரிந்து நாசம்: தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மகாராஷ்டிர அரசு தகவல்

பிடிஐ

போதையில் கார் ஓட்டி ஒருவர் உயிரிழக்கக் காரணமான நடிகர் சல்மான் கான் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தீ விபத்தில் எரிந்து போய் விட்டன என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி யொன்றுக்கு பதிலளித்துள்ளது மகாராஷ்டிர அரசு.

மன்சூர் தர்வேஷ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சல்மான் கான் கார் விபத்து வழக்கில் தொடர்புடைய சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்தவர்கள் பெயர்கள், வழக்கறிஞர்கள், சட்ட ஆலோசகர்கள், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை கோரியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிர அரசு, கடந்த 2012 ஜூன் 21-ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அதுதொடர்பான ஆவணங்கள் முற்றிலும் எரிந்து விட்டன எனத் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு செலவு குறித்த கேள்விக்கு, “அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பிரதீப் காரத்துக்கு ஒரு முறை ஆஜராக ரூ.6,000 வழக்கப்பட்டது என்ற தகவல் மட்டுமே அரசுக்குத் தெரியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தர்வேஷ் கூறும்போது, “தீவிபத்தில் எரிந்த ஆவணங்கள் மறுகட்டமைப்பு செய் யப்படும் என மக்களுக்கு அரசு உறுதியளித்தது. ஆனால், சல்மான் வழக்கு குறித்த ஆவணங்கள் இல்லை என்று கூறியிருக்கிறது. இதுவே, அரசின் திறமையின் மைக்கு ஒரு சான்று. இதுபோன்று மிக முக்கியமான வழக்குகள் குறித்த விவரங்கள் இல்லாததால் அவை முடிவு காணப்படாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு மதுபோதையில் கார் ஓட்டி, நடைபாதையில் உறங்கியவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இவ்வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஜாமீன் அளித்துள்ள உயர் நீதிமன்றம் மேல் முறையீடு வழக்கு முடிவடையும்வரை, விசா ரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது.

SCROLL FOR NEXT