இந்தியா

தீர்ப்பு தேதி சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி?

செய்திப்பிரிவு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

பவானி சிங்கின் நியமனம் குறித்த திமுகவின் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, நீதிபதி குமாரசாமி, ‘தீர்ப்பு எழுத கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்'' என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து ஹெச்.எல்.தத்து மே 12-ம் தேதி வரை தீர்ப்பு வழங்க கால அவகாசம் வழங்கினார்.

இதனிடையே அரசு வழக்கறி ஞர் பவானி சிங்கின் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் தீர்ப்பு வழங்கு வது தொடர்ந்து தாமதம் ஆனது. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிப்பதற்கு பல நாட்களுக்கு முன்பாகவே பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “ஜெயலலிதா வழக்கில் மே 11-ம் தேதி தீர்ப்பு வெளியாகிறது'' என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். நீதிமன்ற பதிவாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாகவே சுப்பிரமணியன் சுவாமிக்கு இந்த தகவல் எப்படி கசிந்தது என கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக நீதிமன்ற பதிவாளர் தரப்பில், “சுப்பிரமணி யன் சுவாமி அதிகாரப்பூர்வமற்ற தகவலை பரப்பியுள்ளார்'' என்ற னர். ஆனால் கடந்த 8-ம் தேதி நீதி மன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல், “மே 11-ம் தேதி தீர்ப்பு வெளி யாகிறது'' என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தீர்ப்பு தேதியை தேர்வு செய்வதில் நடந்த விவாதம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்த போது, “பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு போலீஸாருக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதற்காகவே கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீர்ப்பு தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் இடையில் இருந்ததால் போலீஸார் போதிய‌ பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் காலம் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கினால் உச்ச நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான முடிவை எடுப்பதற்கு எளிதாக இருக்கும் என நீதிபதி கருதி இருக்கலாம்” என கூறப்படு கிறது.

SCROLL FOR NEXT