இந்தியா

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு நாள் எதிரொலி: அதிமுக நகரம் ஆன ஐ.டி. சிட்டி பெங்களூரு

இரா.வினோத்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாகிறது. இதன் எதிரொலியாக, ஐ.டி. நகரம் என்றழைக்கப்படும் பெங்களூரு முழுவதும் அதிமுக மயமாகக் காட்சி அளிக்கிறது.

பெங்களூரு நகரத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் முகாமிட்டிருப்பதே இதற்குக் காரணம்.

சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விசாரித்தார். கடந்த மார்ச் 11-ம் தேதி அனைத்துக்கட்ட விசாரணையும் நிறைவடைந்ததையொட்டி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, 'மேல்முறையீட்டு வழக்கில் மே 11-ம் தேதி காலை 11 மணிக்கு நீதிமன்ற ஹால் எண் 14-ல் தீர்ப்பு வெளியிடப்படும்' என கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பெங்களூருவை 'ஆக்கிரமித்த' அதிமுகவினர்!

ஜெயலலிதா வழக்கில் கடந்த முறை தீர்ப்பு வெளியானபோது அதிமுகவினர் தமிழக எல்லையிலே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் பெங்களூருவுக்குள் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், இந்த முறை ஜெயலலிதா உட்பட 4 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை என்றபோதும், ஆயிரக்கணக்கான‌ அதிமுக வழக்கறிஞர்களும் தொண்டர்களும் பெங்களூருவில் குவிந்துள்ளனர்.

சிவாஜிநகர், மெஜஸ்டிக், மார்க்கெட், சாந்திநகர், எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு ஆகிய இடங்களில் ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், பஸ்கள் மூலம் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் இன்றும் பெங்களூரு வந்தவண்ணம் இருந்தனர்.

பட்டாசுகள், இனிப்புகள் தயார்...

பெங்களூருவில் அதிமுகவினர் முன்னேற்பாடாக பட்டாசுகளையும் இனிப்புகளையும் பெருமளவில் இருப்பு வைத்துள்ளனர். தீர்ப்பையொட்டி அவர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.

இது தொடர்பாக கர்நாடக அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ''இந்த முறை தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக தான் வரும். எனவே தீர்ப்பை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்காக பெங்களூருவில் தமிழர் வாழும் பகுதிகளில் சிறப்பு பந்தல்கள் அமைக்கப்பட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான லட்டு, மைசூர் பாக் உள்ளிட்ட இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் நடந்துவருகிறது. இதே போல ஓசூரில் 10 பட்டாசு குடோன்களில் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அங்கிருந்து திறந்த வேன் மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டாசுகள் பெங்களூரு கொண்டுவரப்பட இருக்கிறது. தீர்ப்பு வெளியான அடுத்த கணம் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட தயாராக இருக்கிறோம்.இதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் இருந்து வந்துள்ள அதிமுக தொண்டர்களும் இனிப்புகளும்,பட்டாசுகளும் வாங்கி வந்துள்ளனர்.

இதனிடையே 'அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், எம்பிக்கள் யாரும் பெங்களூரு செல்ல வேண்டாம்' என ஜெயலலிதா கட்டளை இட்டுள்ளார். இதன் காரணமாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் யாரும் பெங்களூருவுக்கு வரவில்லை. ஒருவேளை எம்எல்ஏக்கள் வரலாம் என தெரிகிறது'' என்றனர்.

பொதுவாக, பெங்களூருவின் முக்கியப் பகுதிகளில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஐ.டி. இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் வலம்வருவதைக் காணலாம். ஆனால், இன்றோ அங்கிங்கெனாதபடி அதிமுக கரை வேட்டிக் கட்டியவர்களின் எண்ணிக்கையே அதிகம் இருந்தது.

தேநீர் கடைகள், ஹோட்டல்கள், சந்தைப் பகுதிகள், வணிக வளாகங்கள், முக்கிய சாலைகள் என பெங்களூருவின் அனைத்து இடங்களிலும் அதிமுக கரை வேட்டி அணிந்தவர்களை கூட்டம் கூட்டமாகவோ அல்லது சிறு குழுவாகவோ பார்க்க முடிந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னதாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் வெள்ளிக்கிழ்மை உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், போலீஸ் டி.ஜி.பி. ஓம் பிரகாஸ், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து பெங்களூரு மாநகர இணை ஆணையர் சந்தீப் பட்டீல் கூறும்போது, "ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியாவதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை கர்நாடக உயர் நீதிமன்றத்தை சுற்றி 1 கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி கூடுதல் ஆணையர் அலோக் குமார் தலைமையில் 4 உதவி ஆணையர்கள் , 20 காவல் ஆய்வாளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்ற‌னர். நீதிமன்றத்தின் 5 நுழை வாயில்களிலும் சோதனைக்குப் பிறகே வழக்கறிஞர்களும் பத்திரிகையாளர்களும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்" என்றார்.

எல்லையில் பாதுகாப்பு

இதனிடையே, தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓசூர் உட்கோட்ட போலீஸார் சுமார் 300-க்கும் அதிகமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தமிழகத்திலிருந்து பெங்களூரு செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT