இந்திய சீன உறவு மேம்படுவதற்கு இரு நாட்டுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியமாகும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியத் தரப்பு தலைவராகவும் அஜித் தோவல் இருக்கிறார். டெல்லியில் நேற்று நடைபெற்ற கே.எஃப்.ருஸ்தாம்ஜி நினைவு சொற்பொழிவில் கலந்துகொண்டு பேசிய அவர், மேலும் கூறிய தாவது:
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே தற்சமயம் நல்ல உறவு அமைந்திருக்கிறது. ஆனாலும் எல்லைப் பிரச்சினையைப் பொறுத்த வரையில், நாம் மிக அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
3,488 கிலோ மீட்டர் எல்லை
சீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட வுடன், சீன எல்லையை நாம் வேறொரு கோணத்தில் இருந்து பார்க்க வேண்டும். சுமார் 3,488 கிலோமீட்டர் நீண்ட எல்லையை நாம் கொண்டிருக்கிறோம். இந்திய சீன உறவுக்கு இந்த எல்லைதான் மிக முக்கியமான மையமாக உள்ளது.
ஆங்கிலேயர் கால இந்தியா வில் 1914ம் ஆண்டு சீனாவுடனான எல்லைப் பிரச்சினையின்போது பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கியவரும் வெளியுறவுச் செயலராகவும் இருந்தவர் சர் ஹென்றி மக்மகோன். அவருடைய பெயரில் உள்ள எல்லை பர்மா வரையில் நீள்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளும் சீனா, அதற்குப் பிறகு நீளும் எல்லையை சீனா உரிமை கொண்டாட நினைக்கிறது.
அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் வழியாகச் செல்லும் எல்லைதான் நம் கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது.
எந்த முன்னேற்றமும் இல்லை
இந்தப் பிரச்சினை குறித்து இரு நாடுகளுக்கிடையே இதுவரை 17 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. எனினும், கடந்த 30 ஆண்டுகளில் ஒருமுறை கூட எந்தப் பக்கத்தில் இருந்தும் ஒரு தோட்டா கூட பாயவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் நிகழும் ஊடுருவல் சம்பவங்களும் அவ்வப்போது அதிகரித்து பின்னர் குறைகின்றன. கடந்த ஆண்டு இப்படியான ஊடுருவல் சம்பவங்கள் குறைந்துள்ளன.
இதற்கிடையில் பாகிஸ்தா னுடன் சீனா உறவு கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளும் நாம் புரிந்துவைத்திருக்கிற ஜனநாய கத்தை அளிக்கும் ஜனநாயக நாடுகள் அல்ல.
நம்மிடம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கிற வரையில் நம்மால் பெரு மளவுக்கு மோதல்களைத் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டில் எல்லைப் பாதுகாப்புப் படையைத் தோற்றுவித்தவர் ருஸ்தாம்ஜி ஆவார். அந்தப் படையின் நிறுவனர் இயக்குநராகப் பதவி வகித்தவர், 1960களில் ஓய்வு பெற்றார்.
எனினும், பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் முதல் சிறப்பு செயலராகப் பணியில் அமர்த்தப்பட்டார். நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் பெற்ற ஒரே போலீஸ் அதிகாரி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நினைவாக ஆண்டுதோறும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.