தமது நாட்டுக்கு வருகை தருமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகள் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்சே இந்தியப் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரக்கூடாது என தமிழக கட்சிகள், தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அதேவேளையில், இலஙகைத் தமிழர் நலன் கருதியே இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பாஜக தொடர்ந்து வலியுறுத்து வந்தது.
இந்நிலையில், எதிர்ப்புகளுக்கு இடையே இந்தியா வந்துள்ள ராஜபக்சே, பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பின்போது, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.
அப்போது, இரு தரப்பு மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு உறுதுணைபுரிவது என மோடியும் ராஜபக்சேவும் ஒப்புக்கொண்டனர்.
இந்தத் தகவலைத் தெரிவித்த வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், தமது நாட்டுக்கு வருகை தருமாறு இலங்கை அதிபர் ராஜபக்ஷே விடுத்த அழைப்பை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார்.