கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காரு பேட்டையில் கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் தனது குடும்பத்தின ருடன் வசித்து வருகிறார். இவரது மகள் ஈஸ்வரி அங்குள்ள தனம்மா சென்னபசவேஸ்வரா பி.யூ. கல்லூரியில் (12-ம் வகுப்பு வரை உள்ள மேல்நிலைப்பள்ளி) 12-ம் ஆண்டு பி.யூ.சி. படித்து இறுதித் தேர்வை எழுதினார்.
கடந்த 18-ம் பி.யூ.சி. தேர்வு முடிகள் வெளியாயின. இதில் ஈஸ்வரி கன்னட பாடத்தில் 98 மதிப் பெண்கள் பெற்றிருந்தார். இதன் மூலம் தமிழை தாய்மொழியாகக் கொண்டு பயின்ற ஈஸ்வரி, கோலார் மாவட்டத்திலேயே கன்னட பாடத்தில் முதலிடம் பிடித்தார். இதனால் அவரது குடும்பத்தினரும் பள்ளி நிர்வாகத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஈஸ்வரி கூறும் போது, “கன்னடத்தில் 98 மதிப் பெண்கள் பெறுவேன் என எதிர் பார்க்கவில்லை. கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்ததால் இயல்பாகவே கன்னட மொழியின் மீது எனக்கு பற்று ஏற்பட்டது. இதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 125-க்கு 125 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றேன். தற்போது 2 மதிப்பெண்கள் குறைந்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளேன். இதற்கு காரணமான எனது ஆசிரியர் களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
ஈஸ்வரியை கன்னட ஊடகங் கள் வெகுவாக பாராட்டியுள்ளன. பல பத்திரிகைகைகள் ஈஸ்வரியின் பேட்டியை முதல் பக்கத்திலே பிரசுரம் செய்துள்ளன. மேலும் ஈஸ்வரியின் தலைமுறையில் இருக்கும் பல தமிழ் மாணவர்கள், கன்னட மொழியை ஆர்வமுடன் கற்று வருவதாகவும் எழுதியுள்ளன. இதனால் கர்நாடக வாழ் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.