இந்தியா

மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும்: அவைத்தலைவரிடம் அதிமுக கோரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது தமிழில் பேச அனுமதியில்லை. இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ள அதிமுகவினர் அவைத்தலைவர் ஹமீது அன்சாரியின் உத்தரவுக்காக காத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாய்மொழியில் பேசுவதையே எம்.பி.க்கள் விரும்பு கின்றனர். இந்தி பேசும் எம்.பி.க்களுக்கு இதில் பிரச்சினை இல்லை. மகாராஷ்டிரம், அசாம், ஆந்திரம், ஒடிஸா மற்றும் கர்நாடக மாநில எம்.பி.க்களுக்கு இந்தி தெரியும் என்பதால் அவர்களுக்கும் இந்தியில் பேசுவதில் சிக்கல் ஏற்படுவதில்லை. ஆனால், தமிழக எம்.பி.க்களில் சிலருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதில் இடர்பாடு உள்ளது. இதனால், அவர்களில் சிலர் மக்களவையின் பூஜ்ய நேரத்திலும், விவாதங்களிலும் தமிழிலேயே பேசி விடுகின்றனர். இதை, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதித்து உள்ளார். எனினும் பூஜ்ய நேரத்தில் விதி 377-ன் கீழ் மட்டும் தமிழில் பேச அனுமதி இல்லை.

மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் தமிழில் பேச இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து `தி இந்து’விடம் மாநிலங்களவை மூத்த எம்.பி.க்கள் சிலர் கூறும்போது, “பூஜ்ய நேரம் என்பது முக்கியமான பிரச்சனைகளை முன் வைத்து பேசும் நேரம் ஆகும். இந்த நேரத்தில் உறுப்பினர்கள் தம் தாய் மொழியில் பேசினால் தங்கள் கருத்துகளை உறுதியாக எடுத்து சொல்ல முடிகிறது. எனவே, தமிழில் பேச அனுமதிக்கக் கோரும் மனுவை அனைத்து அதிமுக எம்.பி.க்களும் கையொப்பமிட்டு மாநிலங்களவை தலைவரிடம் வழங்கியுள்ளனர். ஆனால், அவர் இன்னும் அதற்கான அனுமதியை வழங்கவில்லை” என்றனர்.

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒருமுறை மக்களவையில் தமிழக எம்.பி.யின் ஒரு துணைக்கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தாய்மொழியாகிய தமிழில் அளித்த பதில் அனைவரது கவனத்தை கவர்ந்தது. மாநிலங்களவையின் உத்தராகண்ட் மாநில பாஜக உறுப்பினரான தருண் விஜய் அவ்வப்போது தன் உரைகளில் பல்வேறு தமிழ் வார்த்தைகளையும் கூறி பாராட்டுகளை பெற்று வருகிறார்.

மக்களவையில் விவாதம், துணைக்கேள்வி மற்றும் பூஜ்ய நேரத்தில் விதி 377-ன் கீழ் எழுப்பப்படும் பிரச்சினைகள் தவிர மற்ற அனைத்தும் தமிழில் பேச அனுமதிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் மட்டும் இன்னும் அனுமதிக்கப்படாமல் உள்ளது.

SCROLL FOR NEXT