குஜராத் மாநிலத்தில் புதிய கடற்படைத் தளம் செயல் பாட்டுக்கு வந்துள்ளது. 'ஐ.என்.எஸ். சர்தார் படேல்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படைத் தளம் அம்மாநிலத்தின் 1,600 கிலோமீட்டர் நீள கடற் கரையைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். குஜராத் மாநில முதல்வர் ஆனந்திபென் படேல் இந்த படைத்தளத்தைத் திறந்து வைத்தார். ஓகா பகுதியில் அமைந்திருக்கும் ஐ.என்.எஸ்.துவாரகா படைத் தளத்துக்குப் பிறகு குஜராத்தில் அமைக் கப்பட்டிருக்கும் இரண்டாவது படைத்தளம் இதுவாகும்.
நிகழ்ச்சியில் பேசிய கடற்படைத் தளபதி ஆர்.கே.தோவன், ‘‘குஜராத்தில் 1,600 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை உள்ளது. கடல்சார் வணிகத்துக்கு இது முக்கியமான இடமாக மாற்றம் கொண்டுள்ளது. மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு பங்கு கடல்சார் பொருட்களில் இருந்து கிடைக்கிறது. எனவே கடற்கரையைக் காப்பாற்றுவது நமது கடமை’’ என்றார்.