செம்மரம் கடத்தியதாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக தொழி லாளர்கள், ஆந்திர போலீஸாரால் வெவ்வேறு இடங்களில் இருந்து அழைத்துச் சென்று கொல்லப் பட்டிருப்பது செல்போன் பதிவுகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது. இதுதொடர் பான அறிக்கை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழக தொழி லாளர்களில் 11 பேர் செல்போன் வைத்துள்ளனர். செல்போன் கோபுரங்களின் உதவியுடன் அவர்களின் செல்போன் உரை யாடல்கள், ஊரிலிருந்து புறப்பட்ட நேரம், ஆந்திர எல்லைக்கு சென்ற நேரம், என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் அவர்களின் செல்போன்கள் செயலிழந்த நேரம் போன்றவை துல்லியமாக தெரிய வந்துள்ளன.
‘கால் டீடெய்ல் ரெக்கார்டர்’ (சிடிஆர்) எனப்படும் செல்போன் களின் இந்த பதிவுகள் குறித்த அறிக்கை தற்போது தேசிய மனித உரிமை ஆணையத்திடம் அறிக்கையாக தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
என்கவுன்ட்டரில் உயிரிழந்த வர்களில் செல்போன் வைத்திருந்த 11 பேர் சம்பவம் நடந்த ஏப்ரல் 7ம் தேதிக்கு முந்தைய நாள்தான் தங்களது சொந்த கிராமங்களில் இருந்து ஆந்திரா சென்றுள்ளனர். இவர்களை ஆந்திராவில் வெவ்வேறு இடங்களில் போலீஸார் கைது செய்துள்ளனர். இவை அனைத்தும் இவர்களது செல்போன்களில் உள்ள உரையாடல், மற்றும் இவர்கள் சென்ற ஊர்கள் போன்றவற்றின் மூலம் தெரிய வந்துள்ளன.
என்கவுன்ட்டரில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெருமாள், முனுசாமி, பழனி, மகேந்திரன் ஆகியோரின் செல்போன் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளன. இதில் பெருமாள், பழனி ஆகிய இருவரின் செல்போன்கள் மட்டும் என்கவுன்ட்டர் நடைபெறுவதற்கு 3 மணி நேரம் முன்பு வரை செயல்பட்டு வந்துள்ளன. மற்ற 18 பேரின் செல்போன்கள் செய லிழந்தன.
திருவண்ணாமலை மாவட்டம் படவீடு பகுதியை சேர்ந்த முனுசாமி ஏப்ரல் 6-ம் தேதி மதியம் 12 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளார். இவர் அதிகமாக செல்போன் உபயோகப் படுத்தவில்லை. மகேந்திரனும், முனுசாமியும் ஒன்றாகவே பயணம் செய்துள்ளனர். ஆகவே இருவரது செல்போன்களிலும் ஒரே நேரம் காட்டுகின்றன. ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திருப்பதி நகரில் உள்ள எம்.ஆர் பல்லி பகுதியில் இரவு 7.55 மணி வரை இவரது போன் அணைக்கப்படவில்லை. அதாவது என்கவுன்ட்டர் நடந்த பின்னரும் கூட இவரது செல் போன் செயலிழக்கவில்லை. போலீஸார் இந்த செல்போனுக்கு யாராவது கூட்டாளிகள் தொடர்பு கொள்கிறார்களா என கண்டறிய இதனை மட்டும் ஆஃப் செய்ய வில்லை என கருதப்படுகிறது.
ஆந்திர போலீஸார், “தமிழக கூலி தொழிலாளிகள் சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள், அதாவது ஏப்ரல் 6-ம் தேதியன்று அதிக அளவில் செம்மரங்களை வெட்டி கடத்தி செல்வது தெரியவந்தது என்றும், இதனால் இரவு சேஷாசலம் வனப்பகுதிக்கு அதிரடி படையினர் சென்றதாகவும், அப்போது மறுநாள் காலை 5.30 மணியில் இருந்து 6 மணிக்கு செம்மர கடத்தல் கும்பல் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், தங்களை தற்காத்து கொள்ள என்கவுன்ட்டர் செய்ததாகவும்” தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், தற்போது சுட்டு கொல்லப்பட்ட அனைத்து தொழிலாளர்களின் செல்போன்கள் வெவ்வேறு இடங்களை காட்டுவது எப்படி? ஆந்திர போலீஸார் தொழிலாளர்களை வெவ்வேறு இடங்களில் பிடித்து சேஷாசலம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று சுட்டு கொன்றுள்ளது அம்பலமாகி உள்ளது.
இந்த செல்போன்களின் ஆதாரங்கள் குறித்து அதிரடிப்படை டிஐஜி காந்தாராவிடம் விசாரித்த போது, தற்போது வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தால் இது குறித்து எதுவும் கூற இயலாது என தெரிவித்து விட்டார்.