ஓடும் பஸ்ஸில் மானபங்கப்படுத்தி தள்ளியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து அம்மாநில கல்வி அமைச்சர் சுர்ஜித் சிங் ரக்ரா கூறிய கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மோகா சம்பவம் குறித்து அமைச்சர் கூறும்போது, "சிறுமி பலியானது இறைவனின் விருப்பம். விபத்துகளை யாரும் தடுக்க முடியாது. நாம் அனைவருமே விபத்துகளை சந்திக்க நேரிடும். நடப்பவை எல்லாமே இறைவன் விருப்பப்படியே நடக்கின்றன. சிறுமி உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அதேவேளையில் யாரும் இயற்கையின் விருப்பத்துக்கு யாரும் விதிவிலக்கல்ல" என்றார்.
மாநில அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக, கடந்த 29-ம் தேதி பஞ்சாப் மாநிலம் மோகாவில் இருந்து 38 வயதான பெண், அவரது 14 வயது மகள், 10 வயது மகன் ஆகியோர் பாகபுரானா என்ற இடத்துக்கு பஸ்ஸில் புறப்பட்டனர். நடத்துநர், உதவியாளர், மற்றொரு நபர் ஆகியோர் சேர்ந்து தாயையும் சிறுமியையும் மானபங்கப்படுத்தினர்.அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரையும் ஓடும் பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்டனர். இதில் சிறுமி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தாய் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவத்துக்கு காரணமான பஸ், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் குடும்பத்தினருக்குச் சொந்தமானது.
இந்நிலையில், அரசு அறிவித்துள்ள இழப்பீடுகளை ஏற்க மறுத்துள்ள சிறுமியின் குடும்பத்தார் சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மோகா மாவட்ட எஸ்.பி. ஜதீந்தர் கேரா கூறும்போது, "இப்பிரச்சினை முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பலியான சிறுமியின் உடல் சிங்காவாலா கிராமத்தில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுமி உடலுக்கு இறுதிச் சடங்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் தரப்பில் பெற்றோர், உறவினர்களிடம் நடத்தப்பட்ட சமசரச முயற்சிகள் அத்தனையும் தோல்வியடைந்துவிட்டன.
20 லட்ச ரூபாய் இழப்பீடு, சிறுமியின் தாயாருக்கு அரசு வேலை, அவருக்கு அரசு செலவில் உயர் சிகிச்சை, விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஏற்பாடு என பல்வேறு அறிவிப்புகளை முன்வைத்து சிறுமியின் உறவினர்கள் எதையும் ஏற்பதாக இல்லை.
அவர்கள் ஆர்பிட் ஏவியேஷன் பஸ் நிறுவனத்தின் உரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றனர்" என்றார்.