இந்தியா

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் தொழிலதிபர் நவீன் ஜிண்டாலுக்கு சம்மன்: 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

செய்திப்பிரிவு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் புகார் வழக்கில் காங்கிரஸ் தலைவரும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால், மத்திய முன்னாள் அமைச்சர் தாசரி நாராயண ராவ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா உள்ளிட்ட 14 பேரை குற்றம்சாட்டப்பட்டவர்களாக அறிவித்து சம்மன் அனுப்பியது சிறப்பு நீதிமன்றம்.

இந்த வழக்கு ஜார்க்கண்டில் உள்ள அமர்கோண்டா முர்காதங்கல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பானது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கினை விசாரித்து வரும் சி.பி.ஐ., பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து வருகிறது. அந்த வகையில், ஜார்க்கண்டில் உள்ள முர்காதங்கல் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ., கடந்த மாதம் 29-ம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும் தொழி லதிபருமான நவீன் ஜிண்டால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, நிலக்கரித்துறை முன்னாள் இணையமைச்சர் தாசரி நாராயண் ராவ், நிலக் கரித்துறை முன்னாள் செய லாளர் ஹெச்.சி.குப்தா உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதுதவிர ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் லிமிடெட் மற்றும் ஜிண்டால் ரியால்ட்டி பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 5 நிறுவனங்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த குற்றப்பத்திரிகையை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட டெல்லி சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட நவீன் ஜிண்டால், மதுகோடா உள்ளிட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.

இவர்கள் அனைவரும் மே 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT