சல்மான் கானின் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தபோது, மும்பை உயர் நீதிமன்றதுக்கு வெளியே அவரது ரசிகர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மது போதையில் கார் விபத்து ஏற்படுத்திய வழக்கில் சல்மான் கானுக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் சல்மான் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை தொடங்கியது. விசாரணை நடந்து கொண்டிருந்த வேளையில், நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே சல்மான் கான் ரசிகர்கள் குவிந்திருந்தனர். அதில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
தற்கொலைக்கு முயற்சித்தவர் கவுரங்கூ குன்ட்டு என்று கண்டறியப்பட்டுள்ளார். தற்கொலைக்கு முயற்சிக்கும் முன்னர் நீதிமன்ற வளாகத்தின் வெளியே அவர் துண்டுப் பிரசுரங்களை வழங்கியுள்ளார்.
அதில், "நான் திரைப்படத்தில் கதாசிரியராக வேண்டும் என்று முயற்சித்து வருகிறேன். எனது திறமையை உலகம் அறிய சல்மான் கான் உதவி புரிவார் என்று பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தேன்.
அவருக்கு திரைக்கதைகள் பலவற்றை அனுப்பி வைத்துள்ளேன். அவருக்கு தண்டனை கிடைத்தால் எனது எதிர்காலமும் வீணாகும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்ற வளாகத்தில் விஷம் அருந்திய அவரை போலீஸார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். தற்போது அவரது உடல் நிலை சீராகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.