இந்தியா

நீதிபதி குமாரசாமி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாவதையொட்டி நீதிபதி சி.ஆர்.குமாரசாமியின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி சி.ஆர்.குமாரசாமிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு எலஹங்காவில் உள்ள அவரது வீட்டில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய 5 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல அவரது காருக்கு முன்பாகவும் பின்பாகவும் இரு கார்களில் 10 போலீஸார் பாதுகாப்பு அளிக்கின்றனர். நீதிபதி குமாரசாமி பயணிக்கும் காரில் துணை ராணுவப்படையை சேர்ந்த ஒரு பாதுகாப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆச்சார்யாவுக்கும் பாதுகாப்பு

இதனிடையே நேற்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவை தொடர்பு கொண்ட பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி,''ஏதேனும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வேண்டுமா?''என கேட்டார்.

அதற்கு ஆச்சார்யா, 'கடந்த முறை நான் வழக்கில் ஆஜராகாமல் இருந்தபோதே அதிமுக தொண்டர்கள் எனக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதனால் எனக்கு பாதுகாப்பு வழங்கினால் நல்லது''என தெரிவித்தார். இதையடுத்து ஆச்சார்யாவின் வீடு, காருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 6 போலீஸார் பாதுகாப்புக்கு உள்ளனர்.

SCROLL FOR NEXT