இந்தியா

உ.பி. அமைச்சர் ஆசம்கானுடன் போலீஸ் அதிகாரிகள் மோதல்: முதல்வர் அகிலேஷ் யாதவ் சமாதானம்

செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேசத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆசம்கான் போலீஸ் அதிகாரிகள் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்களை அழைத்துப் பேசி சமாதானம் செய்துள்ளார்.

இதற்காக, கடந்த வியாழக்கிழமை இரவு முதல்வர் வீட்டில் அதிகாரிகள் கூட்டம் நடந்தது. பொதுப்பணித் துறை அமைச்சரும் ஆளும் சமாஜ் வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம்சிங்குக்கு நெருக்கமானவரு மான ஆசம்கானையும் முதல்வர் அழைத்திருந்தார். இந்தக் கூட்டத்தில் மாநில உள்துறை முதன்மை செயலாளர், காவல்துறை தலைவர், ராம்பூர் பகுதி ஐ.ஜி. ஆகியோர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின்படி ஆசம்கானின் சொந்தத் தொகுதியான ராம்பூர் பகுதியின் டி.ஐ.ஜி. துர்காசரண் மிஸ்ரா பதவி மாற்றம் செய்யப்பட்டார். இவரது இடத்தில் குலாப் சிங் என்ப வர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சமாஜ்வாதி கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மோகன் சிங்கின் சகோதரர்.

இந்த மோதலுக்கு, ஆசம்கானின் ஆளுமையில் உள்ள தொகுதியான ராம்பூரில், போலீஸாருடன் கைகலப் பில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியான மறுதினம் ராம்பூர் முழுவதும் இரு சக்கர வாகன சோதனையில் போலீ ஸார் ஈடுபட்டனர். இதில் அஜீம்நகரில் பிடிபட்ட 3 இளைஞர்கள் போலீஸா ருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மூவரையும் அஜீம்நகர் காவல்நிலையத்துக்கு கொண்டுவந்த போலீஸார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவர்களை மீட்க, அமைச்சர் ஆசம்கான் நள்ளிரவில் காவல்நிலை யத்துக்கு வந்துள்ளார். அங்கிருந்த இளைஞர்களை விடுவிக்கும்படி அவர் கூறியதை ராம்பூர் மாவட்டக் கண்காணிப்பாளர் ஆர்.கே.பரத்வாஜ் ஏற்கவில்லை. இதற்கு கடும்கோபம் கொண்ட ஆசம்கான், அந்தக் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் எம்.பி.சிங், போதையில் இளைஞர்களை அடித்து துன்புறுத்தியதாக பலவந்த மாக வழக்குப் பதிவு செய்து விட்டார். மேலும் தலைமைக் காவலர் மது அருந்தி இருந்ததாக ராம்பூர் அரசு மருத்துவமனை சார்பில் சான்றிதழ் அளிக்கச் செய்துள்ளார்.

இதை அறிந்த டிஐஜி துர்காசரண் தலைமைக் காவலரை அருகிலுள்ள முராதாபாத் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்ப, அங்கு அவர் மது அருந்தவில்லை என சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் மறுநாளே ராம்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப் பாளரை இடம் மாற்றச் செய்துவிட்டார் ஆசம்கான். பிறகு அவருக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே உருவான மோதல், முதல்வர் முன் னிலையில் முடித்து வைக்கப்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மாநில போலீஸ் அதிகாரிகள் கூறு கையில், “தேர்தலில் ஆளும்கட்சி தோல்வி அடைந்ததற்கு கோபம் கொண்டு அங்கு சோதனை என்ற பெயரில் பொதுமக்களை சித்ரவதை செய்ய உத்தரவிட்டதே அமைச்சர் தான். இதில், சிக்கிய 3 இளைஞர் கள்தான் தாங்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் என்ற தைரி யத்தில் போலீஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டனர்” என்றனர்.

இந்த மோதலில் ஆர்.கே.பரத் வாஜுக்கு பதிலாக மாற்றலாகி வந் திருக்கும் சாதனா கோஸ்வாமி துணை கண்காணிப்பாளராகப் பணி யாற்றியர் எனவும், அமைச்சரின் காணா மல் போன எருமைகளை கண்டுபிடித் தமைக்காக பதவி உயர்வு பெற்றவர் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரி வித்தனர். கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களும் சாதனாவின் ஒத்துழைப்பின் பேரில் தற்போது, ஜாமீனில் வந்துள்ளனர்.

உண்மையான எருமை திருடர்கள் யார்?

கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ஆசம்கானின் ராம்பூர் பண்ணை வீட்டில் இருந்து 7 எருமைகள் காணாமல் போயின. இதில் துணை கண்காணிப்பாளர் சாதனா கோஸ்வாமி தலைமையிலான தனிப்படை எருமைகளை கண்டுபிடித்ததுடன், திருடியவர்கள் என நால்வரை கைது செய்தது. இந்நிலையில் அருகிலுள்ள எட்டவா மாவட்டத்தில் அண்மையில் நடந்த திடீர் சோதனையில் லாரி நிறைய எருமைகளுடன் 3 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், ஆசம்கானின் எருமைகளை திருடியது தாங்கள்தான் எனக் கூறியுள்ளனர். இதனால், எருமைகளை திருடிய உண்மைக் குற்றவாளிகள் யார் என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT