பக்தர்களுக்கு லட்டு டோக்கன் வழங்குவதில் மோசடி நடை பெற்றதாக தகவல் வெளியான தையடுத்து, ஊழியர்களிடம் தேவஸ் தான கண்காணிப்பு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் பெறுவதற்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அலிபிரி மலைவழிப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாத டோக்கன்கள் வழங்கப்படுகிறது.
சர்வ தரிசன திட்டத்தின் கீழ் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ரூ.20க்கு 2 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. கூடுதல் லட்டு பிரசாதம் தேவைப்படும் பக்தர்களுக்கு ரூ.100-க்கு 4 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் லட்டு டோக்கன் வழங்கும் மையங்களில் போலி டோக்கன்கள் புழங்குவதாக வந்த புகார்களின் பேரில், கடந்த சில நாட்களாக தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், லட்டு வழங்கும் மையத்தில் ஏராளமான போலி டோக்கன்கள் இருந்தது நேற்று தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான அச்சகத்தில் லட்டு டோக்கன்கள் அச்சடிக்கப்பட்டு, தேவஸ்தான ஊழியர்கள் மூலம் திருமலைக்கு கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இவற்றில் தேவஸ்தான முத்திரையும், வரிசை எண்களும் இருக்கும். ஆனால் பிடிபட்ட போலி டோக்கன்களில் எவ்வித வரிசை எண்களும் இல்லை.
இதுபோன்று ஆயிரக்கணக்கான போலி டோக்கன்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் லட்சக்கணக்கில் தேவஸ்தானத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தான அச்சக ஊழியர்களிடமும், லட்டு டோக்கன் வழங்கும் ஊழியர்களிடமும் தேவஸ்தான அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 மணி நேரம் காத்திருப்பு
ஆந்திராவில் அரசு பஸ் ஊழியர்கள் நடத்தி வந்த கால வறையற்ற வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால் வழக்கம்போல பஸ்கள் இயக்கப் படுகின்றன. மேலும் இது கோடை விடுமுறைக்காலம் என்பதாலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வந்த தாலும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், சர்வ தரிசனம் செய்ய நேற்று 12 மணி நேரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோன்று மலைவழிப் பாதை வழியாக நடந்து சென்று திவ்ய தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனது. இதனிடையே நேற்று மதியம் திருமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளானார்கள்.