இந்தியா

ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் தொடர்ந்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி

செய்திப்பிரிவு

அவதூறு வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி நீதிமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆஜரானார். இந்த வழக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தடை விதித்தபோதிலும் ராகுல் காந்தி ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி இந்த வழக்கில் ஆஜராவார் என மார்ச் 30-ம் தேதி அவரது தரப்பு வழக்கறிஞர் உத்தரவாதம் கொடுத்திருந்ததால் அதற்கு கட்டுப்பட்டு மாஜிஸ்திரேட் டி.பி.காலே முன்பு ஆஜரானார்.

நீதிமன்றத்தில் சுமார் 15 நிமிடங் கள் இருந்தார் ராகுல். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், தனது வழக்கறிஞர் கொடுத்த வாக்கை காப்பாற்றவே நீதிமன்றத்தில் ஆஜரானதாக தெரிவித்தார்.

இதனிடையே நீதித்துறையை மதிப்பதால் வழக்கில் ஆஜராவேன் என்று கொடுத்திருந்த வாக்குறு திக்கு கட்டுப்பட்டு வழக்கில் ஆஜ ரானதாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராகுல் தெரிவித் திருக்கிறார்.

காந்தி நடத்திய போராட்டம் நமக்காக மேற்கொண்டதாகும். அந்த போராட்டத்தை நடத்தி நாம் வெற்றிபெறுவோம் என்றும் அவரது மற்றொரு ட்வீட் தெரிவிக்கிறது.

பெங்களூருக்கு செல்லும் வழியில் மும்பை வந்த ராகுல் அங்கிருந்து தானே சென்றார்.

மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்று ராகுல் தெரிவித்திருந்ததற்காக அவதூறு வழக்கை பிவாண்டி விசாரணை நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் ராஜேஷ் குந்தே என்பவர் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தடைவிதித்தது.

SCROLL FOR NEXT