இந்தியா

கார் விபத்து வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை: மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

செய்திப்பிரிவு

குடிபோதையில் கார் ஓட்டியதில் ஒருவர் பலியான வழக்கில், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் புதன்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி இரவு, பாலிவுட் நடிகர் சல்மான் கான் காரில் சென்றார். அவர் குடிபோதையில் இருந்ததால் கட்டுப்பாடில்லாமல் சென்ற கார், பாந்த்ரா மேற்குப் பகுதி யில் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது.

விபத்து நடந்ததை அறிந்த சல்மான் கான், தான் ஓட்டி வந்த டொயோட்டா லேண்ட் குரூஸர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். அவரது பாதுகாவலர்களும் ஓடிவிட்டனர். இதற்கிடையில், கார் விபத்தில் நூருல்லா மெகபூப் ஷெரீப் என்பவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கு முதலில் மும்பை பந்த்ரா மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது. பல சாட்சிகளை விசாரித்த நீதிபதி, விசாரணையை பாதியில் நிறுத்திக் கொண்டார். மேலும், வழக்கின் தன்மை கருதி, மும்பை செஷன்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரை செய்தார். அதன்பின் இந்த வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி டி.டபிள்யூ.தேஷ்பாண்டே, மே 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அன்றைய தினம் காலை சல்மான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதன்படி, மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அப்போது வெள்ளை சட்டை, ஜீன்ஸ் பேன்ட் அணிந்தபடி சல்மான் கான் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என்று நீதிபதி தேஷ்பாண்டே தீர்ப்பு வழங்கினார். தண்டனை விவரத்தை பிற்பகல் 1.10 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்தார்.

45 நிமிடங்கள் கழித்து பிற்பகல் நீதிமன்றம் கூடியதும், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

நீதிபதி கூறும்போது, "சல்மான் கான் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன. கார் ஓட்டிய போது அவர் மது அருந்தியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்தியதால் அலட்சியமாக கார் ஓட்டியுள்ளார். மேலும், அவரிடம் ஓட்டுநர் உரிமமும் (லைசென்ஸ்) இல்லை. இதன் மூலம் அவர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார்.

தீர்ப்பை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சல்மான் கான் கண்ணீர் விட்டார். பின்னர் சல்மான் கானைப் பார்த்து, "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று நீதிபதி கேட்டார். அதற்கு சல்மான் கான், "விபத்து நடந்தபோது நான் காரை ஓட்டவில்லை. எனினும், உங்கள் தீர்ப்பை மதிக்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன். என் சார்பில் என் வழக்கறிஞர்கள் பேசுவார்கள்" என்று கண்ணீர் விட்டபடி கூறினார். பின்னர் சல்மான் கானை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

முன்னதாக, இந்த வழக்கின் விசாரணை நடந்தபோது, தான் காரை ஓட்டவில்லை. தனது டிரைவர் அசோக் சிங்தான் காரை ஓட்டினார் என்று திடீரென சல்மான் கான் கூறினார். இதை ஓட்டுநர் அசோக் சிங்கும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஆனால், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. இதற்கிடையில், கார் விபத்து நடந்தபோது சல்மான் கானிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. விபத்து நடந்து 2 ஆண்டுகள் கழித்து 2014-ம் ஆண்டுதான் அவர் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார் என்று கூறி அதற்கான ஆவணங்களை ஆதாரமாக அரசு வழக்கறிஞர் சமர்ப்பித்தார்.

இதைத் தொடர்ந்து, நடிகர் சல்மான் கானுக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது மும்பை உயர் நீதிமன்றம். | அதன் விவரம்: >சல்மான் கானுக்கு 2 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது மும்பை உயர் நீதிமன்றம் |

சல்மான் தரப்பு வாதம்:

சல்மான் கான் ஒரு நடிகர் என்பதால் அவருக்கு அதிகப்படியாக தண்டனை வழங்க வேண்டாம் என அவரது வழக்கறிஞர் வாதாடினார். | அதன் விவரம்: >சல்மான் ஒரு நடிகர்... அதிகபட்ச தண்டனை வழங்காதீர்: வழக்கறிஞர் வாதம் |

பாதிக்கப்பட்டோர் குமுறல்:

நடிகர் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை விதிப்பதால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எங்களுக்குத் தேவை எல்லாம் இழப்பீடு மட்டுமே என கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். | அதன் விவரம்: >இழப்பீடுதான் எங்களின் தேவை: சல்மான் கார் விபத்தில் பாதித்தோர் குமுறல் |

கலங்கும் பாலிவுட்:

இந்தி நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது தங்களை கலங்கச் செய்துள்ளதாக இந்தித் திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். | அதன் விவரம்: >சல்மான் கானுக்கு சிறை: இந்தி திரை நட்சத்திரங்கள் உருக்கம் |

SCROLL FOR NEXT