ஆந்திர மாநிலத்தில் 3 ரயில்களில் கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது ரயிலில் இருந்த பாதுகாப்பு படை போலீஸார் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், டங்கடூரு ரயில் நிலையம் அருகே புதன் கிழமை நள்ளிரவு கொல்கொத்தாவில் இருந்து சென்னை நோக்கி ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென சூராரெட்டி பாளையம் என்கிற இடத்தில் ரயில் பயணம் செய்த கொள்ளை கும்பல் அபாய சங்கலியை பிடித்து ரயிலை நிறுத்தியது. பின்னர் பயணிகளிடம் நகை, பணம் போன்றவற்றை கொள்ளை அடிக்க முயற்சித்தது. அப்போது ரயிலில் இருந்த பாதுகாப்பு படை போலீஸார், கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் கொள்ளையர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்து, அங்கிருந்த கற்ககளை போலீஸார் மீது வீசி தாக்குதல் நடத்தி தப்பித்தனர்.
இதன் பின்னர் இதே பகுதியில் சென்னை, திருமலா எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளை அடிக்க முய ற்சித்துள்ளனர். ஆனால் இந்த ரயில்களிலும் போலீஸார் பாதுகாப்புக்கு இருந்துள்ளதால் கொள்ளை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன.