இந்தியா

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார்: எதிர்க்கட்சிகளுக்கு நிதின் கட்கரி அறைகூவல்

பிடிஐ

ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மத்திய அமைச்சர் மற்றும் எம்.பி. பதவியை துறக்கத் தயாராக இருக்கிறேன் என்று நிதின் கட்கரி கூறினார்.

நிதின் கட்கரியின் குடும்பத்தினருக்கு சொந்தமான புர்த்தி சாகர் நிறுவனம், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி முகமையிடம் ரூ.46 கோடி கடன் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட மத்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நியாயமாக விசாரணை நடைபெற வேண்டும், அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தால் மாநிலங்களவையில் இன்று 3-வது நாளாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

எதிர்க்கட்சியினரின் அமளியால் மாநிலங்களவை இன்று 9 முறை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையிலும் இந்த விவகாரத்தில் அமளி ஏற்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று கூறும்போது, “ஒரு ரூபாய் அளவாக இருந்தாலும், நான் ஊழல் செய்ததாக எந்தவொரு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டாலும் அமைச்சர் பதவி மட்டுமல்ல, எம்.பி. பதவியை விட்டும் விலகத் தயாராக இருக்கிறேன்.

எங்களுக்கு எவ்வித சலுகையும் காட்டப்படவில்லை. சிஏஜி அறிக்கையில் எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. சிஏஜி அறிக்கை தவறாக சித்தரிக்கப்படுகிறது. இது அரசியல் சந்தர்ப்பவாதம். மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

எதிர்க்கட்சியினரின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டேன். இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பதில் அளிப்பேன். ஆனால் இவர்கள் அரசியல் செய்ய விரும்பினால், எனது அணுகுமுறையை மாற்றிக்கொள்வேன்” என்றார்.

SCROLL FOR NEXT