இந்தியா

தர்ணாவுக்கு பிறகு என்.டி.திவாரியை சந்தித்தார் 62 வயது ‘மனைவி’

செய்திப்பிரிவு

காதலன் அல்லது கணவரை சந்திக்க இளம்பெண்கள் போராட்டம் நடத் தும் செய்திகள் வழக்கமானது. ஆனால், காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரியை அவரது 62 வயது ‘மனைவி’ தர்ணாவுக்கு பின் சந்தித்த சம்பவம் வெள்ளிக்கிழமை லக்னோவில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில தலை நகர் லக்னோவில் முக்கியப் பிர முகர்கள் வசிக்கும் பகுதி மால் அவென்யூ. இங்கு உபியில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் சிறப்பு விருந்தினராக அம் மாநில முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி வசித்து வருகிறார். இவரை சந்திக்க சுமார் ஒரு வாரமாக முயன்று வருகிறார் உஜ்வல் சர்மா. இதற்கு திவாரியின் பாதுகாப்பு அதிகாரியான பவானி தத் பட் தடையாக இருந்துள்ளார்.

இதனால், அவர் மீது அருகிலுள்ள காவல் நிலையத்தில் உஜ்வல் புகார் செய்தார். இதில், பலன் கிடைக்காததால் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை ‘விச்சார் மன்ச்’ எனும் சமூக அமைப் பாளர்களுடன் திவாரி வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் அமர்ந்தார் உஜ்வல் சர்மா. சுமார் நான்கு மணி நேரப் போராட்டத்தில் காவல் துறை தலையிட்ட பிறகு திவாரியை சந்திக்க உஜ்வல் சர்மாவிற்கு அனுமதி கிடைத்தது.

இதுகுறித்து ‘தி இந்து'விடம் விச்சார் மன்சின் குல்தீப் வர்மா கூறுகையில், ‘‘பல ஆண்டுகளுக்கு முன் உஜ்வலுடன் இணைந்து வாழ்ந்த திவாரிக்கு ரோஹித் சேகர் பிறந்தார். இதை மறுத்து வந்தபோதும், ரோஹித் நீதிமன்றம் சென்ற பின் அவரை தன் மகனாக ஏற்றுக் கொண்டார் திவாரி. ஆனால், திவாரிக்கு பாதுகாப்பு அளிக்கும் பெயரில் பவானி, அவரது சொந்த வாழ்க்கையில் தலையிடுகிறார்’’. எனப் புகார் கூறினார்.

இந்தப் பிரச்சனைக்கு பின் பாதுகாப்பு அதிகாரியான பவானி தம் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து'விடம் பாதுகாப்பு அதிகாரி பவானி கூறுகையில், ‘உஜ்வல் சர்மா சில குண்டர்களுடன் திவாரியின் வீட்டில் பலவந்தமாக நுழைய முயன்றதால் அவர்களைத் தடுத்தேன். இவர்களால் முன்னாள் கவர்னரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இந்த தகவலை நான் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்து விட்டேன். உஜ்வல் சர்மா, எனது பெயரைக் கெடுக்க முயல்வதால் நான் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளேன்" எனக் கூறினார்.

இதற்கு முன் இரு தினங்களுக்கு முன்பு லக்னோவின் முக்கியப் பகுதியான ஹஸ்ரத்கன்சிற்கு வந்த திவாரியின் காரை தடுத்து நிறுத்தியும் உஜ்வல் சர்மா அவரை சந்திக்க முயன்றார்.

SCROLL FOR NEXT