இந்தியா

நக்சலைட் கண்ணிவெடி தாக்குதல்: மகாராஷ்டிரத்தில் 7 போலீஸார் பலி

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 7 போலீஸார் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் 48 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. எனினும் மே 16 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கட்சிரோலி மாவட்டம், சாமோர்ஸி வட்டத்துக்கு உள்பட்ட வனப் பகுதிகளில் நக்சலைட் எதிர்ப்புப் படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை 9.40 மணி அளவில் முர்முரி-சாமுரி கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் போலீஸ் ரோந்து வாகனம் சென்று கொண்டிருந்தபோது நக்சலைட் தீவிரவாதிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர்.

இதில் 7 போலீஸார் அதே இடத்தில் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள நாக்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கண்ணிவெடித் தாக்குதலைத் தொடர்ந்து போலீஸாருக்கும் நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இதன்பின்னர் அடர்ந்த காடுகளுக்குள் நக்சலைட்டுகள் தப்பிச் சென்றுவிட்டனர்.

சம்பவ பகுதிக்கு கூடுதல் போலீஸ் படைகள் அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் நக்சலைட்டுகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

30 கிலோ வெடிகுண்டு

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலிகிரா என்ற இடத்தில் உள்ள பாலத்தின் அடியில் 30 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சக்திவாய்ந்த அந்த வெடிகுண்டை சி.ஆர்.பி.எப். போலீஸார் செயல் இழக்கச் செய்தனர். இந்த குண்டு வெடித்திருந்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT