இந்தியா

மக்களவையில் நிறைவேறியது சரக்கு - சேவை வரி மசோதா

பிடிஐ

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவையில் புதன்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற போது பிரதமர் நரேந்திர மோடி அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மூலம் நாடு முழுதும் ஒரே மறைமுக வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப் படவுள்ளது. இதற்காக நிபுணர்கள் குழு பரிந்துரை செய்த 27% வரி விதிப்பைக் கூட தளர்த்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளார்.

மேலும், மாநிலங்களின் வருவாய்க்கு எந்த வித பங்கமும் இந்த மசோதாவினால் ஏற்படாது என்றும் அப்படி வருவாய் இழப்பு ஏற்பட்டால் மத்திய அரசு அதன் இழப்பை ஏற்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 352 வாக்குகள் அளிக்கப்பட்டது. எதிராக 37 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டது.

ஏப்ரல் 1, 2016 முதல் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தினால் மாநில அரசுகள் வசூலிக்கும் சுங்க வரி, சேவை வரி, மாநில வாட் வரி, நுழைவு வரி, ஆக்ட்ராய் மற்றும் பிற வரிகள் சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த அருண் ஜேட்லி, “மசோதா என்பது நடனமாடும் ஒரு உபகரணம் கிடையாது, நிலைக்குழுவிலிருந்து நிலைக்குழு என்று அதனை தாவச்செய்து கொண்டே இருக்க முடியாது” என்றார்.

மேலும், “நிபுணர்கள் குழு பரிந்துரை செய்த 27% வரி மிகவும் அதிகம், நிச்சயம் இது குறைக்கப்படும். நாடு முழுதும் ஒரே வரி விதிப்பு முறை இருக்கும் போது பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும், வளர்ச்சி நோக்கி அடியெடுத்து வைக்க முடியும்” என்றார் அருண் ஜேட்லி.

SCROLL FOR NEXT