விளம்பரத்துக்காக நேபாள நிலநடுக்கம் குறித்து நான் எழுதவில்லை என்று இந்தி திரைப்பட உலகின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இயங்கி வருவதுடன், தனக்கென்று தனியான வலைப்பூ ஒன்றையும் அமிதாப் பச்சன் நடத்தி வருகிறார்.
அவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கங்களில், நேபாள நிலநடுக்கம் குறித்து எழுதியிருந்தார். அதற்கு அவரின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும், சில இணைய பதிவர்கள், ‘அமிதாப் பச்சன் தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ள நேபாள நிலநடுக்கம் குறித்து எழுதுகிறார்' என்று விமர்சித்து வந்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது போல சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு பதிவை எழுதியிருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அவர்கள் (ஒரு சில இணைய பதிவர்கள்) நான் விளம்பரம் தேடிக் கொள்வதற்காக இப்படி எழுதுவதாகக் கூறுகிறார்கள். முட்டாள்கள்! இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர் களுக்கு என்னால் முடிந்த உதவி களைச் செய்து வருகிறேன்.
இன்று என் வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்கிறது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரங்களில் அதனை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்வதற்கு நான் தயங்குவதில்லை. இது சரியானது அல்ல என்பது எனக்குத் தெரியும். நான் ஒருபோதும் அப்படியான வார்த்தைகளைப் பிரயோகிப்பவனாக இருந்ததில்லை. இனியும் இருக்க மாட்டேன். மன்னியுங்கள். மறந்து விடுங்கள்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.