மத்திய அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி தலைமைச் செயலாளர் கே.கே. சர்மா அண்மையில் அமெரிக்கா சென்றார். இதைத் தொடர்ந்து சகுந்தலா காம்ளின் என்பவரை தற்காலிக தலைமைச் செயலாளராக துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நியமித்தார்.
ஆனால் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் சகுந்தலா காம்ளினை உடனடியாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் கேஜ்ரிவால் அறிவுறுத்தினார். அதனை துணைநிலை ஆளுநர் ஏற்கவில்லை. இந்நிலையில் துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த 21-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் நியமனம், காவல் துறை, நிலம் சார்ந்த விவகாரங்களில் ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து துணைநிலை ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைதொடர்ந்து மத்திய அரசின் அரசாணையை எதிர்த்து சட்டக் கல்லூரி மாணவர் விபார் ஆனந்த் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் பொதுநல வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பதார் துரஸ் அகமது, சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொதுநல மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்